ஜனவரி 7

“தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்” (வெளி 21:6).

நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவர் எதிர்ப்பார்ப்பது ஆவிக்குரிய தாகம். ஆனால் நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் தாகமுள்ளவர்களாய் காணப்படுகிறோமா? அநேக வேளைகளில் நம்முடைய வாழ்க்கையில் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், வெறுக்கிற தீமையையே செய்கிறவர்களாய் காணப்படுகிறோம். நீதியின்மேல் பசி தாகம் உள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள் (மத்தேயு 5:6) என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய தாகம் இருக்கும்பொழுது மாத்திரமே, ஜீவத்தண்ணீரை நாம் விரும்புகிறவர்களாய் காணப்படுவோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஜீவத் தண்ணீரை இலவசமாகக் கொடுக்கிறவராக இருக்கிறார். அந்த ஜீவத் தண்ணீரானது நம்முடைய வாழ்க்கையில் ஜீவ காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும். வெளிப்படுத்தின விசேஷம் 22:17 -ல் “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” என்று வேதம் சொல்லுகிறது. ஆவிக்குரிய தாகம் நம்முடைய வாழ்க்கையில் இடைவிடாமல் காணப்படும்பொழுது, தேவன் நிச்சயமாக அவைகளை நிறைவாய்க் கொடுப்பார். “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்” (ஏசாயா 55:1). இலவசமாய் கர்த்தர் கொடுக்கும்படியான இவ்விதமான மிகுந்த ஈவுகளுக்காக நாம் அவருக்கு நன்றி செலுத்துவோம். அதை விலைமதிப்போம். அப்பொழுது கர்த்தர் இவைகளினால் நம்முடைய ஆத்துமாவை திருப்தியாக்குவார்.