பிப்ரவரி 8

ஜீவத் தண்ணீர் ஊற்று

“அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்” (வெளி 21:6).

 நம்முடைய ஆண்டவர் எவ்விதமானவர் என்பதைக் குறித்துப் பார்க்க அவருடைய குணாதிசயங்களைச் சிந்திப்பது நமக்குப் பிரயோஜனமான காரியம். கர்த்தர் சொல்லுகிறார் நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று. தேவனே ஆரம்பமும் முடிவுமாயிருக்கிறார். அவர் அறியாமல் இந்த உலகத்தில் நேரிடுகிறது ஒன்றுமில்லை. எல்லாம் அவருடைய ஞானத்திற்கும் திட்டத்திற்கும் உட்பட்டவிதத்தில் அவரே சகலத்தையும் நியமிக்கிறவர் நடப்பிக்கிறவர். இந்த தேவனை நாம் எவ்விதமாக அறிந்திருக்கிறோம் என்பது மிக முக்கியமல்லவா?  தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன் என்றும் சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் இதற்கு விலைக்கிரயம் செலுத்தவேண்டிய அவசியமில்லை. நீதியான வாழ்க்கையை நாம் வாஞ்சிப்பதே தேவை. நம்முடைய வாழ்க்கையில், ஆண்டவரே உமக்குப் பிரியமாகவும் இந்த உலகத்தில் உமக்குச் சாட்சியாகவும் உமது நாமத்திற்கு மகிமையாய் வாழுகிற ஒரு மனிதனாக என்னை மாற்றும் என்று தாகத்தோடும், விருப்பத்தோடும் இருக்கும்பொழுது வேதம் சொல்லுகிறது,  “ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்”. இது எவ்வளவு மேலான காரியம்! நமக்கு ஜீவனைக் கொடுக்கும்படியான தேவனுடைய ஊற்று. நம்முடைய வாழ்க்கையில் போதுமான அளவிற்கு அதிகமாகவும் அவருடைய கிருபை நம்முடைய வாழ்க்கையில் அதிகமாய் ஊற்றப்படக்கூடிய அன்பு. இந்த மேலான ஆசீர்வாதத்தை நாம் எண்ணிப் பார்க்கும்பொழுது “கர்த்தாவே இவ்விதமான கிருபைக்கு நன்றி” என்று சொல்லுவோம். அப்பொழுது நிச்சயமாக அதில் நாம் பெருகுவோம் திருப்தியடைவோம்.