கிருபை சத்திய தினதியானம்

மார்ச் 29          கர்த்தருடைய சமுகத்தை நாடு        சங்கீதம் 9:1–20

      “சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்;

நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்” (சங்கீதம் 9:9).

      உன் வாழ்க்கையில் நீ மிகவும் நெருக்கப்பட்டு, சிறுமைப்பட்ட மனிதனாகக் காணப்படுகிறாயா? பயப்படாதே. நீ சிறுமைப்பட்டவன் என்று நீ நினைக்கும்பொழுது கர்த்தர் அவ்விதமான உணர்வை  அலட்சியம் பண்ணமாட்டார். அவர் உனக்கு அடைக்கலமாக இருப்பார். “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்” (சங்கீதம் 46:1) என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் நம் வாழ்க்கையின் ஆபத்தான சூழ்நிலைகளில் நமக்கு பெலனைக் கொடுக்கிறவராக இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவரே நமக்கு துணையாக இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. தேவன் நம் பட்சத்தில் இருக்கும்பொழுது நம்மை விரோதிப்பவன் யார் என்று வேதம் கூறுவதை அறிந்திருக்கிறோம்.

      மேலும் நெருக்கப்படுகிற காலங்களில் அவர் நமக்கு தஞ்சமானவர் என்று வேதம் சொல்லுகிறது. ஒருவேளை நீ மற்றவர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டு அல்லது நெருக்கப்பட்டு அல்லது பாடுபடுத்தப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தால் கலங்காதே. கர்த்தர் உனக்கு தஞ்சமானவர். அவர் உன்னை பாதுகாத்து, வழிநடத்துவார். நீ எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் உன்னை நிலைநிறுத்திக்கொள். ஆகவேதான் தேவன்: “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்” (சங்கீதம் 50:15) என்று சொல்லுகிறார்.

      நம்முடைய ஆபத்துக் காலத்தில் நாம் யாரை நோக்கிக் கூப்பிடுகிறோம்? இன்றைக்கு அநேகர் ஆபத்தில் மிகவும் பயந்து காணப்படுகிறார்கள். மேலும் மனிதனின் உதவியை நாடித் தேடுகிறார்கள். ஆனால் அவைகள் எல்லாம் வீண். அநேக சமயங்களில் நாம் நம்மை இக்கட்டில் இருந்து மீட்டுப் பாதுகாக்கிற தேவனை மறந்துவிடுகிறோம். நம்முடைய ஆபத்தான சூழ்நிலையில் கர்த்தரை நாம் நோக்கிப் பார்ப்போம். அவர் சமுகத்தில் சென்று காத்திருப்போம். அப்பொழுது அவர் நம்மை ஆபத்திலிருந்து மீட்டு, மெய் சமாதனத்தைக் கட்டளையிடுவார்.