“பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது” யூதா 1:3

      இந்த நிருபத்தின் ஆசிரியர் மிக ஒரு அவசியமான காரியத்தைக் குறித்து உணர்ந்து, அந்த எண்ணத்தோடு எழுதுகிறார். அது என்ன பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசம்? இந்த உலகத்தில் விசுவாசம் மாத்திரமே மெய்யானது. அது ஒரு விசை மாத்திரமே ஒப்புக்கொடுக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மூலமாக நித்திய ரஜ்ஜியத்திற்கென்று மீட்கப்பட்டு, ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசம் அது. இந்த விசுவாசம் நம்முடைய வாழ்க்கையில் ஆழமாக நமக்கு தேவனுடைய வார்த்தையின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விசுவாசத்திற்காக நாம் போராட வேண்டும். எவ்விதமாக  போராட வேண்டும்? தைரியமாய் போராட வேண்டும். இன்றைக்கு அநேக கிறிஸ்தவ மக்கள் மத்தியில் விசுவாசத்திற்கு புறம்பான பல காரியங்கள் உள்ளே பிரவேசித்து இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். வெளியரங்கமான உணர்ச்சிவசப்படக்கூடிய அநேக காரியங்கள் இன்றைக்கு கிறிஸ்தவ சபைகளிலும் கிறிஸ்தவ மக்களும் நடுவிலும் காணப்படுகிறது. அடையாளங்கள் அற்புதங்களைப் பார்த்து அவைகளைச் சார்ந்து தங்களுடைய  கிறிஸ்தவ வாழ்க்கையை கட்டக்கூடிய பெயரைப் பெற்றிருந்தாலும், மெய்யான ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை அல்லாத காரியத்தை அவர்கள் தெரிந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அது மெய்யான விசுவாச வழி அல்ல. விசுவாசம் என்பது வேதம் போதிக்கும் படியான அதனால் தெளிவுபடுத்தப்பட்ட தேவனுடைய மகத்தான காரியம். இதற்காக நீங்கள் தைரியமாய்ப் போராட வேண்டும். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் மத்தியில் சத்தியத்திற்காகப் போராடுவதைவிட, தங்களுடைய சுய விருப்பத்திற்கு ஏதுவான, தங்களை திருப்திப்படுத்தக் கூடிய விதங்களில், ஆவிக்குரிய காரியங்கள் என்ற பெயரில் மத ரீதியான நிலையில், தங்களுடைய காரியங்களை வழி நடத்திச் செல்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அது மெய்யான விசுவாசம் அல்ல. அந்த வழிமுறை நமக்கு பிரயோஜனமாக இருக்காது. ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் வளர்வதற்கு ஏற்றதாக அது நிச்சயமாக இருக்காது.