கிருபை சத்திய தினதியானம்

ஜூன் 30                      ஜீவனுள்ள தேவன்           யோபு 19:1-29

“என் மீட்பர் உயிரோடிருக்கிறார்” (யோபு 19:25)

         யோபு தன்னுடைய கடுமையான வியாதியின் மத்தியிலும் தன் விசுவாசத்தை இழந்து விடாதபடிக்கு கர்த்தர் அவரை காத்துக்கொண்டார். அநேகர் தங்கள் வாழ்க்கையில் துன்பங்கள், பாடுகளின் ஊடாக கடந்து செல்லும்பொழுது தேவனை சந்தேகிக்கிறவர்களாக காணப்படுகிறார்கள். ஆனால் யோபுவோ, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்” (யோபு 19:25) என்று சொல்லுகிறார். அதாவது அவர் தேவன் பேரில் கொண்டிருக்கிற மிக பெரிய விசுவாசத்தை இங்கு வெளிப்படுத்துகிறார்.

         நாம் ஆவிக்குரிய காரியங்களில் தேவனை எப்பொழுதும் சந்தேகிக்கக் கூடாது. நம்முடைய தேவன் ஜீவனுள்ளவர். அவர் உயிருள்ள கர்த்தர் என்பதை மறந்துவிடக் கூடாது. “உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்” (ஏசாயா 54:5) என்று அவரின் உன்னதமான தன்மைகளைக் கூறுவதைப் பார்க்கிறோம். சிருஷ்டிகரான தேவன் ஜீவனுள்ளவர் என்பதை மறவாதே. “உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய்ச் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர்” (ஏசாயா 51:15) என்று கர்த்தர் சொல்லுகிறார்.

       அன்பானவர்களே அவர் எண்ணிமுடியாத பெரிய காரியங்களை செய்கிறவர். அவருடைய ஞானத்தை யாரால் அறிந்துகொள்ள முடியும்? நீயும் நானும் ‘மண்’ என்பதை மறந்தாயோ! “யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்” (எரேமியா 10:16) என்று அவரின் நாமத்தை கூறுகிறார். இந்த மகத்துவமான தேவன் நம்மேல் அன்பு வைக்கிறதற்கு நாம் எம்மாத்திரம்? நாமோ அவரின் அன்பை புறக்கணித்து உலகத்தை நாடுகிறோமே. இனியும் தாமதம் வேண்டாம், அவர் மன்னிக்கிற கர்த்தர், மனந்திரும்பி அவரை நேசிப்போம். நம்மையும் உலகத்தின் முடிவில் உயிரோடே எழுப்புவார்.