“அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள்” (எசேக்கியேல் 37:4-5).

      தேவன் இன்றைக்கும் ஆவிக்குரிய மரணத்தில் உள்ளோரை ஜீவனைக் கொடுத்து உயிர்பிக்கிறார். இந்த பகுதியில் நாம் ஆவியானவரையும் கர்த்தருடைய வார்த்தையும் இணைத்து சொல்வதைப் பார்க்கிறோம். ‘கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்’ தேவனுடைய வார்த்தை ஒரு மரித்துப்போன ஆத்துமாவை உயிரடையச் செய்கிறது. தேவ ஆவியானவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டு ஆத்துமாக்களை இன்றைக்கும் உயிர்ப்பிக்கிறவராக இருக்கிறார். ஆகவேதான் கர்த்தர்: “செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள்” (ஏசாயா 42:18) என்று சொல்லுகிறார். ஆவிக்குரிய செவிடர்களாக, ஆவிக்குரிய குருடர்களாக இருப்பவர்களை தேவனுடைய வார்த்தை மெய்யாலுமே உயிர்ப்பிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது. “மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவான் 5:25) என்று இயேசு சொல்லுகிறார். மரித்துப் போன ஆத்மாக்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்பதே இன்றைக்கு மிகப்பெரிய தேவையாக இருக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டங்களில் அநேக மக்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்பதில்லை. அதேபோல் தேவனுடைய வார்த்தையை தெளிவாய் போதிக்கும் போதகர்களையும் இன்றைக்கு எதிர்பார்க்க முடியவில்லை. கட்டுக்கதைகளுக்கு சாய்ந்து போன ஒரு காலமாக இன்று இருக்கிறது. ஆனால் தேவனுடைய வார்த்தையின் வல்லமை மாறிப்போகவில்லை. அது இன்றைக்கும் ஜீவனுள்ளதாக இருக்கிறது. கற்பாறையைப் போல கடின இருதயம் கொண்ட மக்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்பொழுது நொறுக்கப்படுகிறார்கள். அவர்கள் இருதயம் நொறுங்கும் பொழுது அவர்கள்: ‘பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்’ என்பார்கள்.