“நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்”
மத்தேயு 18:3

      மனம் திரும்புதலுக்கும், பிள்ளைகளுக்கும் என்ன சம்பந்தம்? இந்த இடத்தில் பிள்ளைகள் என்று சொல்லப்படுவது தாய் தகப்பனை முற்றிலும் சார்ந்து கொள்ளுகிற மன நிலையைக் குறிக்கிறதாயிருக்கிறது. நம் வாழ்க்கையில் நாம் தேவனை முற்றிலும் சார்ந்து கொள்ளக்கூடிய ஒரு மனநிலைக்குள் வரும் பொழுது, நாம் மனம்திரும்ப வேண்டிய பல காரியங்களை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. இயற்கையாக மனிதன் வாழ்க்கையில் தன்னைத்தானே சார்ந்து, நம்பி, தன்னுடைய புத்தியையும், தன்னுடைய அறிவையும், தன் செல்வாக்கையும் நம்பி வாழுகிற பாவத்தன்மை உள்ளவன். ஆதாம்-ஏவாளின் வீழ்ச்சியில் இது ஒரு பங்களிப்பு. ஆனால் நம்முடைய வாழ்க்கையில் பிள்ளைகளைப் போல ஆக வேண்டுமானால், நம் வாழ்க்கையில் மனம்திரும்ப வேண்டிய காரியங்கள் உண்டு. அதாவது நம்மை நாமே சார்ந்து கொள்வதை விட்டு, கர்த்தரை மாத்திரமே முற்றிலும் சார்ந்து கொள்கிற மனநிலைக்கு நாம் உட்பட வேண்டும். “இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்” (மத்தேயு 18:4) என்று இயேசுகிறிஸ்து சொல்லுகிறார். பொதுவாக தாழ்மைப்படுத்தல் அனேகர் விரும்பாத ஒன்று. ஆனால் தாழ்மை படுதலே மிகப்பெரிய கனத்தை நமக்கு கொடுக்கும் என்பதை நாம் மறந்து விடுகிறோம். பெருமை நம்மை அழித்துவிடும், தாழ்மை நம்மை உயர்த்தும் என்ற ரகசியத்தை அநேகருடைய வாழ்க்கையில் விளங்கிக்கொள்வதில்லை. பெருமை எப்பொழுதுமே நம்மை  மனிதனிடத்திலிருந்தும், மற்ற உறவுகளிலிருந்தும், தேவனிடத்திலிருந்தும் பிரித்துவிடும். தாழ்மை தேவனோடும், மக்களோடும் நல்லுறவை ஏற்படுத்தும். எல்லாவற்றிற்கும் மேலாக தாழ்மை ஒரு மனிதனை தேவனுடைய ராஜ்யத்தில் பெரியவனாக, உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லுகிறது. ஆகவே நாம் சிறு பிள்ளைகளைப் போல கர்த்தரை மாத்திரமே சார்ந்துக்கொள்வோம். அப்போது நிச்சயமாக வாழ்க்கையில் உயர்வான நிலையை கர்த்தர் நமக்குக் கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார்.