கிருபை சத்திய தின தியானம்

அக்டோபர் 21            கெர்ச்சிக்கிற சிங்கம்                  1 பேதுரு 1:1-10

   “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்;

ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல

எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றிதிரிகிறான்” (1பேதுரு 5:8)

          பிசாசைக் குறித்து விநோதமான கருத்துக்களை இன்று போலி ஊழியர்கள், மக்கள் மத்தியில்  பரப்பி  வருகிறார்கள். இன்றைக்கு பிசாசுக்கு முக்கிய விளம்பரதாரர்கள் வேறு யாருமல்ல, நம்முடைய போலி ஊழியக்காரர்கள்தான். ஆனால் வேதம் போதிக்கும் விதமாக அவர்கள் விளம்பரங்கள் இருப்பதில்லை, அதில் தான் பிரச்சனை.

 

பிசாசு நம்முடைய எதிராளி என்று சொல்லப்படுகிறான். தேவனுக்கு அவன் எதிராளி, ஆகவே தேவனுடைய பிள்ளைகளுக்கும் அவன் எதிராளி. தேவனுடைய காரியங்களை எதிர்ப்பதில் அவன் முதலாவதாக இருக்கிறான். இந்த எதிராளியைக்குறித்து வேதம் போதிக்கிற விதமாக நாம் அறியவில்லையென்றால் நாம் நம்முடைய யுத்தத்தைச் சரிவர செய்யமுடியாது. அவனிடத்தில் தோற்றுவிடுவோம். பிரதான தூதனாக இருந்து விழுந்துபோன அவன் மிகவும் தந்திரசாலி, சொல்லப்போனால் தந்திரத்தில் அவன் புத்திசாலி. அவன் சாதாரணமான எதிராளி அல்ல. கெர்ச்சிக்கிற சிங்கம்போல் இருக்கிறான். கெர்ச்சிக்கிற சிங்கம் தன் இரையின் மேல் குறிவைத்து, அதை தாக்கி முற்றிலும் வீழ்த்தும் வேகத்தோடே இருக்கும். அந்த நேரத்தில் அது தன் முழு பெலத்தையும் உபயோகிக்கும்.

ஆனால்  விசுவாசியாகிய  நீ அறியவேண்டியது, அவனுடைய தோற்றமும் வேகமும் கொடூரமாக காணப்பட்டாலும் அவன் தோற்க்கடிக்கப்பட்ட சத்துரு. அவனுடைய பல் பிடுங்கப்பட்டது. அவன் தோற்றத்தைக் கண்டு அஞ்சாதே. கல்வாரியில் அவன் நமது ஆண்டவரால் தோற்கடிக்கப்பட்டவன். நீ செய்யவேண்டியதை அடுத்த வசனத்தில் பார்க்கிறாய். ‘விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்.’ (1பேதுரு 5 : 9) நீ பிசாசை வெல்லவேண்டுமானால் விசுவாசத்தில் உறுதி உனக்குத் தேவை. நீ தேவனில் நிற்பதை ‘அவர் என் தேவன், என்னைப் பெலப்படுத்துகிறவர்’ என்று விசுவாசத்தில் உறுதியாயிருந்து எதிர்த்து நில். அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிபோவான். (யாக்கோபு 4 : 7)