ஆகஸ்ட் 16                                                

“அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்;  அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை”  (சங் 34 : 5)

     அவர்கள் மாத்திரமல்ல, நீயும் தேவனை நோக்கிப்பார்க்கும்போது பிரகாச மடைவாய். தேவன் உன்னையும் பிரகாசிக்கமுடியும். தேவனை நோக்கிப்பார். உன்னையல்ல, உன்னையே மாற்றிக்கொள்ளும்படியாகவும் அல்ல, அவைகள் அனைத்தும் தோல்வியில் முடியும். அநேகர் தங்களைத் தாங்களே, தங்கள் முயற்சியால் சீர்ப்படுத்திக்கொள்ளப் பிரயாசப்படுகிறார்கள். ஆனால் அது தோல்வியில்தான் முடியும். நீ தேவனை நோக்கி  அவரிடத்தில் வா. அவரை நோக்கிப்பார். அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தவர்கள் எண்ணிகையற்றோர். ‘தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார். (சங் 18 : 28 ). உன்னுடைய வாழ்க்கை ஏற்றப்படாத விளக்கை போல் இருக்கிறதா? உன் இருளை தேவன் வெளிச்சமாக்குவார் என்பதை விசுவாசி.

     “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்” (சங்119 : 130). ஆங்கிலத்தில் உம்முடைய வசனம் நுழைவது வெளிச்சம் தருகிறது என்று பொருள்பட கூறுகிறது. நம்முடைய இருதயம் இருண்டதாக  இருக்கலாம். ஆனால் தேவனுடைய வார்த்தை நம்முடைய இருதயத்தில் பிரவேசிக்கும்போது, வெளிச்சம் செல்லுவது மாத்திரமல்ல அதனின்று இருள் அகற்றப்படும். பேதையை உணர்வுள்ளவனாக்குகிறது, அதாவது அறியாமையை நீக்கி தேவனை அறிகிற அறிவைக் கொடுக்கிறது. தேவனை அறிவதே நித்திய ஜீவன் என்று சொல்லுகிறவிதமாக அந்த மனிதனில் உன்னதமான மாற்றம் ஏற்படுகிறது. அவ்விதமான மக்கள் ஒருகாலும் வெட்கப்பட்டுப் போகார்கள். தேவனுடைய வார்த்தைக்கு உங்கள் இருதயத்தைத் திறவுங்கள். தேவனுடைய வார்த்தை உங்களைப் பிரகாசிக்கிற வெளிச்சங்களாக மாற்றும்.

       தேவனை விசுவாசத்தோடு நோக்கிப்பாருங்கள், தேவன் உங்களை வெட்கமடைய விடமாட்டார். தேவன் இந்த புதிய ஆண்டில்  ஒவ்வொருநாளும் உங்களோடிருந்து உங்களை வழிநடத்துவார். அவருடைய கிருபை அந்தந்த நாளுக்குப் போதுமானதாக இருக்கும்.