டிசம்பர் 29         கர்த்தர் என் வெளிச்சம்       சங்கீதம் 27:1-14

      “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்”(சங்கீ 27:1).

        தேவன் தாமே நம்முடைய வாழ்க்கையில் வெளிச்சமாக இருப்பதினால், நம்முடைய  வாழ்க்கையில் நாம் இடற வேண்டிய அவசியமில்லை. ஏசாயா 60:1 -ல் “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்”என்று வேதம் சொல்லுகிறது. உன் வாழ்க்கையில் கர்த்தரே வெளிச்சமாக இருப்பதினால், நீ எழும்பி பிரகாசி என்று சொல்லுகிறார்.

     இன்னுமாக தேவன் “உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்”(ஏசாயா 60:3) என்று தேவன் சொல்லுகிறார். உன்னுடைய வாழ்க்கையில், உன்னை வாலாக்காமல் தலையாக்குகிறவர் கர்த்தர். மேலும் வேதம் சொல்லுகிறது “எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு”(சங்கீ 68:19-20).

     நம்முடைய வாழ்க்கையில் அநேக சமயங்களில் பலவிதமான பாடுகள் ஏற்ப்படலாம். ஆனால் அவைகள் நம்மை அழிக்கவல்ல, நம்மை மீட்டு இரட்சிக்க தேவன் கொடுக்கும்படியான சிட்சையாக இருக்கிறது. இவர் நம்முடைய இரட்சிப்பு மாத்திரமல்ல, நம்முடைய வாழ்க்கையில் அவர் மூலமாக மரணத்திற்கும் நீங்கும் வழிகளை வைத்திருக்கிறார். ஆத்தும மரணத்திற்கும், பாதாள நரகத்திற்கும் நம்மை மீட்டு பாதுகாக்கும்படியாக, தேவன் தன் சொந்த குமாரனை அனுப்பி நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணுகிறார். நம்முடைய எல்லா பாடுகளும், இனி வரப்போகிற மகிமைக்கு ஏற்றதல்ல என்பதை மறவாதே.