கிருபை சத்திய தின தியானம்

 ஜூலை 1               வெளிச்சம் பிரகாசித்தது       ஏசாயா 9:1-10                  

“இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய

வெளிச்சத்தைக் கண்டார்கள்;  மரண இருளின் தேசத்தில்

குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசாயா 9 : 2)

        ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்ட வாக்குத்தத்தம் எவ்வளவு துல்லியமாக ஆண்டவராகிய இயேசுவில் நிறைவேறிற்று பாருங்கள். தேவனுடைய வார்த்தை இவ்விதமாய் நிறைவேறினதைப் பார்க்கும்பொழுது தேவ வார்த்தையின்மேல் வைத்திருக்கிற விசுவாசம் அதிகரிக்கட்டும். ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு முன் ஏறக்குறைய 400 ஆண்டுகள் யூத சரித்திரத்தில் இருண்ட காலமாக இருந்தது. அவ்விதமான காலத்தில் இயேசு பெரிய வெளிச்சமாய் அந்த மக்களுக்கு காணப்பட்டார். மகா பெரிய இரட்சிப்பின் வெளிச்சமாய் அவர்கள் மத்தியில் ஆண்டவர் பிரகாசித்தார்.

      மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.(யோவான் 8 : 12) இயேசுவே மெய்யான ஒளியாயிருக்கிறார். ஆண்டவராகிய இயேசுவை அறியாத பாதை இருளானது. அன்பானவரே! உன்னுடைய வாழ்க்கையில் இயேசு ஜீவ ஒளியாக இருக்கிறாரா? இயேசுவை உன் ஆண்டவராக, இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் நீ செல்லும் பாதை இருளானது மாத்திரமல்ல அது மரணத்தை நோக்கி செய்யும் பிரயாணம். ஆம்! ஆத்தும மரணத்தை நோக்கி செல்லும் பிரயாணம். இருளில் பிரயாணம் செய்கிறவன் அவனுக்கு முன்பாக என்ன ஆபத்து இருக்கிறதென்பதை அறியமாட்டான். விஷ ஜந்துக்கள் இருப்பதையும் அறியமாட்டான். யாரும் இருளில் பிரயாணம் செய்வதை விரும்பமாட்டார்கள்.

      ஆனால் வெளிச்சத்தில் பிரயாணம் செய்கிறவன் தனக்கு முன்பாக என்ன ஆபத்து இருக்கிறது என்பதை அறிவான். அதற்கு அவன் தன்னை விலக்கி பாதுகாத்துக் கொள்ளமுடியும். அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. இயேசுவை உடையவன் வெளிச்சத்தையும், ஜீவனையும் கொண்டிருக்கிறான். தன் வாழ்க்கையில் இயேசு இல்லாதவன் இருளையும், மரணத்தையுமே கொண்டிருக்கிறான்.