அக்டோபர் 17       

“இருளிலிருந்து வெளிச்சத்தை பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்” (2 கொரிந்தியர் 4:6)

இருள் மிகவும் பயங்கரமானது. எந்த மனிதன் இருளில் இருக்க விரும்புவான்? இருளில் நடப்பவன் தடுமாறி, விழ ஏதுவுண்டு தனக்கு முன்னால் உள்ளதைப் பார்த்து அவன் நடக்கமுடியாது. நம்முடைய வீட்டில் மின்சாரம் போய்விட்டால் பரவாயில்லை என்று அமர்ந்துவிட மாட்டோம். உடனடியாக விளக்கை ஏற்றிவைப்போம். இருள் ஏற்றதல்ல. ஆனால் என்ன ஆச்சரியம், மனிதன் தன் ஆத்துமாவில் ஒளியை விரும்புவதில்லை, இருளையே விரும்புகிறான் என்று வேதம் சொல்லுகிறது. “அவன், தன்னுடைய கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான் (யோவான் 3:20) அதாவது இருளையே அவன் விரும்புகிறான். வெளிச்சம் ஒரு அறையில் எந்தெந்த பொருட்கள் இருக்கின்றன, எந்த நிலையில் இருக்கின்றன என்பதைத் தெளிவாய்க் காட்டும். சரியில்லாதவைகளைச் சரிபடுத்த உதவும்.

சிருஷ்டிப்பில், இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன், நம்முடைய இருதயத்தில் வெளிச்சத்தை பிரகாசிக்கப்பண்ணுகிறார். ஆம்! ஆண்டவராகிய இயேசுவினிடத்தில் வருகிற ஒவ்வொரு மனிதனிலும் இது நடக்கிறது. அவன் தன் வாழ்க்கையின் பாவத்தன்மையை, பாவத்தின் கொடுமையை, பாவத்தின் அருவருப்பைத் தெளிவாய்ப் பார்க்க அது உதவுகிறது. அவன் அதன்  பரிகாரியாகிய இயேசுவை நோக்கிப்பார்க்க அது வழிநடத்துகிறது. பவுல் எவ்விதம் தேவ ஒளி பிரகாசித்தபோது அவன் தன்னை அறிந்துகொள்ள முடிந்தது? அவன் தேவனுக்குப் புறம்பாய் ஓடிக்கொண்டுருக்கிறான் என்பதைக் காணமுடிந்தது. பாவிகளில் பிரதான பாவி நான் என்றான்.

நீ இன்னும் எவ்வளவுக் காலம் இருளில் இருக்க விரும்புகிறாய்? அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத் தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.” (யோவான் 3:19) உன்னுடைய வாழ்க்கையில் இருள் உனக்கு கடைசியில் ஆக்கினையைத்தான் கொண்டுவரும். ஒளி உன்னை பிரகாசிக்கச் செய்யும்.