ஜனவரி 3                வாழ்க்கை முறை                  ரோமர் 12:9-21

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து,

நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்” (ரோமர் 12:9).

      நம்முடைய வாழ்க்கையில் நாம் செலுத்தும் அன்பானது மாயமானதாக இருக்கக் கூடாது. தேவனுடைய பிள்ளைகள் நடிப்பவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்று கேட்டால் தேவன் அவர்களோடு இருந்து அவர்களை வழி நடத்துகிறார். உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று நடப்பது தேவனுடைய பிள்ளைகளுக்கு அழகல்ல. இங்கு “தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்” என்று பவுல் சொல்லுகிறார். நாம் தீமையை நேசிக்கிறோமா? நம்முடைய வாழ்க்கையில் அவ்விதமான நிலை காணப்படுமானால் அது கர்த்தருக்கு அருவருப்பானது. “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்” (எபி 1:9) என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் தீமையை வெறுக்கிறவராக இருக்கிறார். அப்படியானால் நாம் தீமையை நேசித்து, அதைச் செய்யும்பொழுது கர்த்தர் அதனை அருவருக்கிறார். நம் வாழ்க்கையில் அவ்விதமான காரியங்களை விட்டுவிடுவது நல்லது.

      “ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்” (1 பேதுரு 3:10). நாம் எப்பொழுதும் சமாதானத்தைத் தேடுகிறவர்களாக காணப்படவேண்டும். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்” (எபி 12:14) என்று வேதம் சொல்லுகிறது. சிலர் எப்பொழுதும் சண்டை பண்ணுவகிறவர்களாகவும், தங்கள் வாழ்க்கையில் சமானத்தைக் குலைக்கிறவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் மெய்யான சமாதானமிருக்காது, ஆசீர்வாதமுமிருக்காது. ஆகவே நாமும் உலகத்தாரைப் போல் இராமல் மாயமற்ற அன்பை வெளிப்படுத்தவும், தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.