கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 14                             ஜீவன் பெற்ற ஆத்துமா                   யோவான் 11:30–40

“நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” (யோவான் 11 : 40)

    லாசரு மரித்து நான்கு நாளாயிற்று. இயேசு லாசருவின் கல்லரை முன்பு நின்று ‘கல்லை எடுத்துப்போடுங்கள்’ என்றார். இதைக் கேட்டவுடன் லாசருவின் சகோதரி ‘ஆண்டவரே இப்பொழுது நாறுமே, நான்கு நாளாயிற்றே’ என்றாள். இயேசு ‘நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்’ என்றார். மார்த்தாள் சொன்னது உண்மைதான். யோசித்துப்பாருங்கள் நான்கு நாட்களாக முற்றிலும் காற்றில்லாமலே அடைப்பட்ட நிலையில் லாசருவின் சரீரம் அழுகிக்கொண்டிருந்தது. ஆண்டவர் இயேசு உயிர்ப்பிக்குமட்டாக இரட்சிக்கப்படாத ஒவ்வொரு மனிதனின் ஆத்துமாவும் இவ்விதமாகவே இருக்கிறது. இரட்சிக்கப்படாத ஒரு மனிதனின் செயல்பாடுகளும் அந்த அழுகிப்போன ஆத்துமாவிலிருந்து வரும் நாற்றமாகவே இருக்கிறது.

   நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்றார். விசுவாசம் தேவனுடைய மகிமைகரமான காரியத்தை வெளிக்கொண்டுவரும். விசுவாசத்தின் மூலம் உன்னுடைய அழுகிக்கொண்டிருக்கிற ஆத்துமா உயிரடையும், ஜீவனைப் பெறும். ‘அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களயிருந்த உங்களை உயிர்பித்தார்’ (எபே 2:1). ஆண்டவராகிய இயேசு கட்டளையிட்டவுடன், மரித்து நான்கு நாளான சரீரம் ஜீவனோடே எழும்பிற்று. மரணவாசனை நீங்கி ஜீவ வாசனை வெளிப்பட்டது. மரணம் நீங்கி ஜீவன் உண்டானது .

    அன்பானவர்களே! விசுவாசம் உன் வாழ்க்கையில் தேவனின் மகிமைகரமான உன்னதமான காரியத்தைச் செய்யும். உன் ஆத்துமா லாசருவின் – சரிரம் போல மரித்திருக்கிறதா?. இயேசுவின் ஒரு வார்த்தை போதும் ‘லாசருவே வெளியே வா’ என்று சொன்ன மாத்திரத்தில் உயிர்தெழுந்த சரீரம் போல ஆண்டு ஆண்டுகளாய் மரித்திருந்த ஆத்துமா ஜீவன் பெரும். இதுவே இரட்சிப்பு. உன்னில் அவ்விதம் தேவன் மகிமையாய் செயல்பட்டிருக்கிறாரா? இன்றேல் அவரை விசுவாசத்தோடு பார். நிச்சயம் அவ்விதம் செய்வார்.