கிருபை சத்திய தினதியானம்

ஜூன் 29               மரணத்தில் வாழ்வு           பிலி 1:18-30

“கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” (பிலி 1:21)

      இந்த உலகத்தில் வாழுகிற வாழ்க்கையில் கிறிஸ்துவே நமக்கு ஜீவனாக இருப்பதினால், அவர் மூலமாக நாம் எப்பொழுதும் வெற்றி சிறக்கிறவர்களாகக் காணப்படுகிறோம். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் கிறிஸ்து ஜெயங்கொண்டவராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. மேலும் பவுல் சொல்லுகிறார், “நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்” (பிலி 1:20) என்று சொல்லுகிறார்.
      ஆகவே இந்த உலகத்தில் நாம் வாழுகிற வாழ்க்கை, கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்படியான வாழ்க்கையாக எப்பொழுது இருக்க முடியும்? கிறிஸ்துவே நமக்கு ஜீவனாகவும், பெலனாகவும், நம்பிக்கையாகவும் இருக்கும்பொழுது மாத்திரமே அவ்விதம் முடியும். ஒரு கிறிஸ்தவன் மரணத்தைக் குறித்து பயப்படுகிறவனல்ல. ஏனெனில் அவன் நம்பிக்கையின் நிச்சயம் இவ்விதமாகக் காணப்படும், “தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;” (பிலி 1:23) என்று பவுல் சொல்லுகிறார். எனவே ஒரு மெய்க் கிறிஸ்தவன் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டான். மரணம் அவனுக்கு ஆதாயமே.
      இது எப்படி என்று நாம் சிந்திக்கலாம். ஆனால் ஒரு மெய்க் கிறிஸ்தவனின் நம்பிக்கை, “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்” (2 கொரி 5:1) என்று பவுல் சொல்லுகிறார். ஆகவே அவனுக்கு தான் எங்கே போகப்போகிறோம், எங்கே தங்கப்போகிறோம் என்கிற நம்பிக்கை இருப்பதினால் அவனுக்கு மரணம் என்பது பயமல்ல. மாறாக அவனுக்கு அது மேன்மையே. அன்பான சகோதரனே, சகோதரியே நம் நிலை என்ன? மரணத்தைக் குறித்து பயம் உள்ளதா? கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைப்போமானால் அதை வெற்றிக்கொள்ளுவோம் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் கிறிஸ்து மரணத்தை ஜெயித்தவர் என்பதை மறவாதே.