நவம்பர் 28                       

அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே  மரித்தோர் தங்கள் தங்கள் கிரியகளுக்குத் தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்” (வெளி 20:12)

    மனிதன் தான் செய்யும் எல்லாவற்றையும் ஒருவரும் கவனிக்கவில்லை என்று எண்ணுகிறான். ஆகவே அவன் விரும்புகிறபடி ஜீவிக்கிறான். அவன் கணக்குக் கொடுக்கிற உத்திரவாதி என்பதை எண்ணுவதில்லை. ஆனால் வேதம் தெளிவாய் போதிக்கிறதென்னவென்றால் இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனுடைய செயல்பாடும் தேவனால் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கென்று புஸ்தங்களை வைத்திருக்கிறார். அவைகளை தேவன் ஒருநாளில் வெளிகொண்டு வருவார். வேதாகமம் சொல்வது பொய்யல்ல. அது மாத்திரமல்ல, உன் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயதீர்ப்பு அடைவாய். தேவனை விசுவாசிக்காத மனிதனின் செயல்கள் எவ்வளவு நல்லதாக காணப்பட்டாலும் அவைகள் கந்தை, குப்பை என்று வேதம் சொல்லுகிறது.

     ஆனால் தேவனுடைய பிள்ளைகளின் பெயர்களோ ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் என்று வேதம் தெளிவாய் போதிக்கிறது. பவுல் பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில் 4ஆம் அதிகாரம் 2ஆம் வசனத்தில், எயோதியாள், சிந்திகேயாள் என்ற இரு சகோதரிகளைக் குறித்துச் சொல்லும் பொழுது திட்டமாய் அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது என்று சொல்லுகிறார். வெளிப்படுத்தின விசேஷம் 21 : 27ல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகம் என்று சொல்லப்படுகிறது. ஆம்! ஆட்டுகுட்டியான இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் தங்களுடைய பாவங்கள் கழுவப்பட்டவர்கள் இவர்கள். அவருடைய குமாரத்திகள், குமாரர்கள். நீ மெய்யாலும் இரட்சிக்கப்பட்டிருப்பாயானால் உன் பெயர் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும். ஜீவ புஸ்தகத்தில் எழுதபட்டவர்கள்  மாத்திரம் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பார்கள் என்பதை வேதம் தெளிவாய் சொல்லுகிறது.(வெளி 21:27) அதே சமயத்தில் ‘ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவனாக காணப்பாடாதவனெவனோ அவன் அக்கினி கடலில் தள்ளப்பட்டான்’ (வெளி 20:15) உன் பெயர் ஜீவப்புஸ்தகத்தில் உண்டா? இதைக்குறித்து நிச்சயப்படுத்திக்கொள்வது நல்லது. இல்லையேல் இன்றே நீ மனந்திரும்பு. இயேசு உன்னை இரட்சிப்பார்.