டிசம்பர் 28        கிறிஸ்து எனக்கு ஜீவன்      பிலிப் 1:20-30

      “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்”(பிலி 1:21).

      இந்த உலகத்தில் ஒரு கிறிஸ்தவன் எதற்குமே பயப்படவேண்டிய அவசியமில்லை. ஏனென்று கேட்டால் அவனுடைய நம்பிக்கை கிறிஸ்துவாக மாத்திரமே இருக்கும். மரணமே ஆனாலும் அவனுக்கு அது இழப்பு அல்ல லாபமே. ஏனென்றால் அவனுடைய வாழ்க்கை இந்த உலகத்தில் முடியும்பொழுது மேலான மகிமையின் வாழ்க்கைக்குள் பிரவேசிக்கிறானே ஒழிய, அவன் இழப்பது ஏதுமில்லை. ஆகவே தான் பவுல் பிலிப்பியர் 1:20 – ல் “நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்”என்று சொல்லுகிறார்.

       வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும் ஒரு கிறிஸ்தவன் வெற்றியோடே கடந்து போக முடியும். இந்த உலகத்தின் காரியங்கள் நிலையானவைகள் அல்ல, அழிந்து போகக்கூடியவைகள். இவைகளில் தேவன் நமக்கு கிருபை காண்பிக்கிறார். ஆனாலும் இவை பிரதானமானது அல்ல என்பதை நாம் எப்பொழுதும் நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். நம்முடைய பிரதானமான காரியம் என்னவென்றால் கிறிஸ்து நமக்கு ஜீவன் அவரோடே கூட மகிமை அடையும்படியாக வாஞ்சிக்க வேண்டும். ஆகவேதான் கொலோசெயர் 3:4-ல் பவுல், “நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்”என்று சொல்லுகிறார்.

      ஆகேவ இந்த உலகத்தின் காரியங்களினால் நசுங்குண்டு போகவேண்டிய அவசியமில்லை. இன்னுமாக பவுல் “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்”(2 கொரி 5:1) என்று சொல்லுகிறார். ஆகவே அருமையானவர்களே இந்த உலகத்தின் காரியங்கள் உன் ஆத்துமாவை அழிக்கும்படியான பலனற்ற காரியங்களை ஒருபோதும் உன் வாழ்க்கைக்குள் அனுமதியாதே. கர்த்தர் நிச்சயமாக உன் வாழ்க்கையில் துணையாக நின்று நித்திய ஜீவன் தருவார் என்பதில் உறுதியாயிரு.