“என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்” (நெகேமியா 2:18).

நெகேமியா பாபிலோன் தேசத்திலிருந்து திரும்பி வந்த பின்பாக, இடிக்கப்பட்ட அலங்கத்தைப் பார்த்த பொழுது அவனுடைய இருதயம் அதிகமாய் வேதனைப்பட்டது. ஆனாலும் உடனடியாக அவன் செய்யக்கூடிய காரியத்தைக் குறித்து அவர்களிடத்தில் பேசவில்லை. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அமைதியாகத் தன்னோடுகூட இருந்த மனிதர்களிடத்தில் இந்தக் காரியத்தைக் குறித்துப் பேசுகிறதை நாம் பார்க்கிறோம். அப்பொழுது நெகேமியா இந்தப் பணிக்கு எவ்விதமாக தேவன் தன்னை வழிநடத்தியிருக்கிறார் என்பதைக் குறித்துச் சொல்லுகிறார். நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய காரியங்களைச் செய்யும்படியான காரியமாக இருந்தாலும் அல்லது வேறெந்த காரியங்களானாலும், தேவன் நம்மை வழிநடத்துவதை அவருடைய வழிநடத்துதலின் மூலமாக  அறிந்துகொள்ளலாம். நெகேமியா அந்த மக்களோடு பேசினபோது, அவர்களும் எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றுச் சொல்லி, அந்த நல்ல வேளைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள். மெய்யாகவே இது நெகேமியாவிற்கு எவ்வளவு பெரிய உற்சாகம் அளிக்கக்கூடியதாய் இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்! நாமும் கூடக் கர்த்தருடைய பணிக்கென்று உண்மையாய் தேவனுக்கென்று உழைக்கிற அவருடைய பிள்ளைகளின் கரங்களைப் பெலப்படுத்துவது அவசியம். அதுமாத்திரமல்ல, கர்த்தருடையப் பணியை ஒருமித்த உண்மையான பாரமுள்ள மனிதர்களோடு சேர்ந்து செயல்படுவதும் தாங்குவதும் நமக்குக் கொடுக்கப்பட்ட சிலாக்கியம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே அவர்கள் அந்தநாளில் ஆரம்பித்த காரியம் எவ்வளவு பெரிய எதிர்ப்பின் மத்தியிலும் தேவன் அந்தப் பணியை நிறைவேற்றதக்கதாக, அவர் தம்முடைய பரத்தின் ஒத்தாசையைத் தந்து, தேவன் நெகேமியாவை திடப்படுத்தி ஆசீர்வதித்து அந்தப் பணியை முற்றும்முடிய முடிக்க கிருபைச் செய்தார். இது எவ்வளவு ஆச்சரியம்!