கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 6            எழுந்துக் கட்டுவோம் வாருங்கள்        நெகே 2  10 – 20

என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே

சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள் 

எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத்

தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள் (நெகேமியா 2 : 18 ).

        நெகேமியா தான் செய்ய இருக்கும் பணிகளை நிறவேற்ற இருதயத்தில் தீர்மானித்து, ஜெபித்து தேவனுக்குள் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டான். நேபுகாத்நேச்சர் ராஜா பாபிலோனிலிருந்து வந்து எருசலேமைத் தாக்கி உடைத்துப் போட்ட அலங்கம் கட்டப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்தது. நெகேமியா எருசலேமின் மக்களைப் பார்த்து இவ்விதம் சொன்னான். இதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அதற்கு பதில் சொல்லுவதைப் பார்க்கிறோம்.

      இதில் இரண்டுவிதமானவர்களைப் பார்க்கிறோம். ஒருவன் தலைவன் மற்றவர்கள் அவனுக்கு ஒப்புக்கொடுத்த மக்கள். எந்த ஒரு பணியிலும் இரண்டும் சரியான நிலையில் இருப்பது அவசியம். தலைவன் மாத்திரம் சரியாயிருந்து மக்கள் சரியில்லையென்றாலும் மக்கள்  சரியாயிருந்து தலைவன் சரியில்லையென்றாலும் பிரச்சனை தான். இதை ஒரு சபையில் போதகனையும் சபை  மக்களையும் உருவகப்படுத்திக்கூடச் சொல்லலாம். போதகன் தேவனுடைய சபையை, சபை மக்களைச் சரியாக வழிநடத்துகிறவனாக காணப்படவேண்டும்.

     அதேவிதத்தில் சபை மக்கள் போதகனோடு ஊழியத்தைக் கட்டும்படி ஒருமனபட்டு ‘எழுந்துக் கட்டுவோம் வாருங்கள்’ என்று சொல்லக்கூடியவர்களாகக் காணப்படவேண்டும். இல்லையென்றால் சபை வளராது. நீ ஒரு போதகனாக இருக்கலாம் அல்லது சபை அங்கத்தினராக இருக்கலாம். ஆனால் தேவன் உன்னை வைத்திருக்கும் நிலையில் உண்மையுள்ளவனாய் இருக்கிறாயா? இங்கு அலங்கம் தேவனுடைய சபைக்கு ஒப்பாயிருக்கிறது. அதில் உன் பங்கு உண்மையாய் இருக்கவேண்டும் என்பதை வாஞ்சி. அந்த மக்கள் நெகேமியாவின் கைகளை திடப்படுத்தினது போல நீங்களும்  உங்கள் சபை போதகனுடைய கைகளைத் திடப்படுத்தவேண்டும். அப்பொழுது தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.