கிருபை சத்திய தின தியானம்

ஜூன் 11            கற்று நிச்சயத்து நிலைத்திரு       2 தீமோ 3:1– 12

நீ கற்று நிச்சயத்துக்கொண்டவைகளில் நிலைத்திரு ( 2தீமோத்தேயு 3 : 14)

    தீமோத்தேயு தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொண்டதை பவுல் இங்கு நினைவுபடுத்துகிறார். நீ சிறுவயது முதல் அவைகளை கற்றிருக்கிறாய், அறிந்திருக்கிறாய் என்று எழுதியிருக்கிறார். நம்முடைய வீட்டிலும் நம்முடைய பிள்ளைகள் தேவனுடைய வார்த்தையை அதிகம் கற்றுக்கொள்ளும்படியான வாய்ப்புகளை பெற்றோர்களாகிய நாம் கொடுக்கவேண்டும். குடும்ப ஜெப வேளைகளில் பிள்ளைகளை வேதம் வாசிக்கச் சொல்லவேண்டும். அந்த நாட்களில் கிறிஸ்தவ பெற்றோர்கள் வேத வசனத்தை மனபாடம் செய்து ஒப்புவித்தால்தான் சாப்பிடவேண்டும் என்ற கண்டிப்பில் வளர்த்தார்கள். ஆனால் இந்த நாட்களில் அவ்விதமான காரியங்கள் மறைந்துவிட்டது. வேதத்திற்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவங்கள், மற்ற அநேக காரியங்களுக்குக் கொடுக்கப்படுகின்றான.

    இங்கு கற்றுக்கொள்வது மாத்திரம் போதாது, அவைகளை நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சொல்லுகிறார். தேவனுடைய வார்த்தையை வாசிப்பது, அறிந்திருத்தல் மட்டும் நம்முடைய வாழ்க்கையில் போதாது அதைக்குறித்த உறுதிப்பாடு நம்மில் அவசியம். அதை தேவன் சொன்னவார்த்தை என்று விசுவாசத்தோடே  ஏற்றுக்கொண்டு உறுதியாய் பற்றிக்கொள்ளவேண்டும். அதன் உறுதியான மாறாத தன்மையை நம்பி நாம் எதைச்செய்தாலும் அதன் அடிப்படையிலேயே செய்யவேண்டும் என்ற ஆழமான தீர்மானம் வேண்டும்.

   அடுத்ததாக அதில் நிலைத்திருத்தல் மிகமிக அவசியம். நீ உன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தீர்மானத்தையும் செயல்பாட்டையும் அதன் அடிப்படையில் நடப்பிக்கவேண்டும். இல்லையென்றால் நீ நிச்சயமாய் விசுவாசிக்கிறாய் என்று எப்படி சொல்லமுடியும்? உனக்கு ஏற்படும் சோதனைவேளைகளில், நெருக்கங்களில், போராட்டங்களில் துன்பங்களில் இன்னும் அநேக வேளைகளில் தேவனின் வார்த்தையில் உறுதியாய் நீ நிலைத்திராவிட்டால் நீ வெற்றியோடு இந்த வாழ்க்கையைக் கடந்து செல்லமுடியாது. புயல் பெருவெள்ளம் வந்தாலும் உறுதியான அஸ்திபாரமே நிலைத்து நிற்கும் என்பதை மறவாதே.