கிருபை சத்திய தின தியானம்

பிப்ரவரி 8             கீழ்ப்படியக் கற்றுக்கொள்       1சாமு 15:22-35

      ‘பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின்

நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்’ (1சாமு 15:22).

      பழைய ஏற்பாட்டுக் காலங்களில் ஜனங்கள் பலியிடுவதில் அதிக கவனமாக இருந்தது உண்மை. தேவனும் பலியைக் குறித்து பழைய ஏற்பாட்டில் கூறியிருப்பதை நாம் வாசிக்கிறோம். ஆனால் இந்த பலிகள் அனைத்துமே ஏதோ செய்யும்படியான வெறும் சடங்காச்சாரங்கள் அல்ல. வேதாகமத்தில் கூறப்படும் அனைத்து  பலிகளும் வரப்போகிற மேசியாவைக் குறித்து சொல்லப்பட்ட முன் அடையாளங்களே. அவைகள் பழைய ஏற்பாட்டு மக்களுக்கு மாத்திரமல்ல, நமக்கும் நியமிக்கப்பட்ட ஒன்று. இந்த இடத்தில் தேவன் பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் மிக அவசியம் என்று அறிவுறுத்துவதைப் பாக்கிறோம். 

 நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய சத்தியத்தை எதிர்க்காமல் கீழ்ப்படிதல் அதிமுக்கியமானது. நம் வாழ்வில் கீழ்ப்படிதல் இல்லாமல் தேவனுடைய சத்தியத்தை அறிந்திருப்பது வீண். நம்முடைய வாழ்க்கையில் அநேக சூழ்நிலைகளில், கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையின் மூலமாக இடைப்படுகிறார். அவர் நம்மிடத்தில் எப்பொழுதும் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார் என்பதை மறவாதே. அவ்விதமான கீழ்படிதலை தேவன் கனப்படுத்துகிறார். இன்னுமாக ‘ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்’ என்று சொல்லுகிறார். செவிக்கொடுப்பதும், கீழ்ப்படிவதும் இணைந்து காணப்படுவதே ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையின் சாராம்சம்.

அநேக சமயங்களில் செவிகொடுக்கிறோம் ஆனால் கீழ்படியத் தவறிவிடுகிறோம். சங்கீதம் 2:10 -ல் ‘உணர்வடையுங்கள்’ என்று சொல்லுகிறார். செவிகொடுத்தலோடு கூட, கீழ்ப்படிவதே நம் இருதயப்பூர்வமான உணர்வோடு ஆண்டவருடைய வார்த்தையைக் கனப்படுத்துவதும், தேவனுடைய வார்த்தையை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதுமாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது கீழ்ப்படியாமை என்கிற பாவம் உண்டா? நம் வாழ்க்கையில் ஆண்டவர் அநேக சத்தியத்தை வெளிப்படுத்தியும், பரிசுத்த ஆவியானவர் உணர்த்தியும் அதற்கு கீழ்ப்படியாமல் மறுக்கிறோமா? நம் ஆதிப் பெற்றோர்கள் செய்த பாவம், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் போனதுதான். அருமையான சகோதரனே! சகோதரியே! கீழ்ப்படியாமை பாவம் என்பதை அறிந்துகொள். உன் நிலை என்ன? இன்னும் தேவனுடைய வார்த்தைக்கு எதிர்த்து நிற்கிறாயா? தற்பரிசோதித்துப்பார். தேவனுடைய வார்த்தைக்குக் கவனமாய் செவிகொடுத்துக் கீழ்ப்படி.