அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்” அப் 16:1

      தீமோத்தேயுவின் தாய் ஒரு நல்ல விசுவாச பெண்மணி. நீங்கள் ஒரு தாயாக உங்களுடைய பிள்ளைகளுக்கு விசுவாசமுள்ள சாட்சியை வைத்திருக்கிறீர்களா? ஒரு தகப்பனாக ஒரு நல்ல விசுவாசமுள்ள முன்மாதிரியை வைத்திருக்கிறீர்களா? “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2 தீமோ 1:5) என்று பவுல் எழுதுகிறார். இந்த உலகத்தில் நாம் எவ்வளவு பணம், பொருட்களை நம்முடைய பிள்ளைகளுக்காகச் சேகரித்தும், அதைப் பின் சந்ததிக்கு என்று விட்டு வைத்து போகும்படியாகவும் ஆசைப்படுகிறோம். ஆனால் அது முக்கியமானது அல்ல. நம்முடைய வாழ்க்கையில் விலையேறப்பெற்ற பொக்கிஷமான விசுவாசத்தை நம்முடைய சந்ததிக்கு வைத்து போகிறோமா? ‘அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது’ என்று ஆவியானவர் சாட்சியிடுகிறார். இன்றைக்கு ஆவிக்குரிய காரியங்களின் விலைமதிப்பை உணர்ந்தவர்களாக அநேக கிறிஸ்தவ குடும்பங்கள் இல்லாதது மிக வருத்தமான காரியம்.       பிள்ளைகளுக்கு நீங்கள் மற்ற எல்லாவற்றையும் கொடுப்பதைவிட விசுவாசத்தையும், ஆண்டவருடைய சத்தியத்தையும்,  ஆண்டவரைப் பற்றி உண்மையான நம்பிக்கையையும் வைத்துப் போவீர்களானால், உங்களுடைய சந்ததி ஆசீர்வதிக்கப்படும். உங்களுடைய சந்ததி கர்த்தருக்குப் பிரியமானதாகக் காணப்படும். ஒருவேளை நீங்கள் சேர்த்து வைக்கும் படியான பொன்னும் பொருளும் உங்களுடைய பிள்ளைகளுக்கும், உங்கள் சந்ததிக்கும் நிச்சயமாக ஆசீர்வாதமாக இருக்குமென்பது என்ன நிச்சயம்?