கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 2                  உன்னதமானவரின் வழிநடத்துதல்         யோசுவா 3:1–17

      “கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல,

உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு,

இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்” (யோசுவா 3:7)

      மோசேவுடனும், யோசுவாவுடனும் இருந்த தேவன் நம்மோடும் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே. அவர்களோடு இருந்து அவர்களை வழிநடத்தின கர்த்தர் நம்மையும் வழிநடத்துவார் என்பதை தெரிந்துகொள். இதை வாசிக்கிற நீங்கள் நான் சொல்லுவதைக் குறித்து அதியசப்படலாம். நீங்கள் அதியசப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நினைக்கலாம் இதெல்லாம் இக்காலத்துக்கும் பொருந்துமா என்று. ஆம்! நான் சொல்லுவது எக்காலத்துக்கும் பொருந்தும். நாம் அவருடைய வழியைக் காத்து நடக்கும்பொழுது அவர் நாமோடு கூட இருந்து நம்மை வழிநடத்துவார். தேவன் சொன்னபடியே யோசுவாவை உயர்த்தினாரா? வேதத்தை ஆராய்ந்து பாருங்கள். “அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்” (யோசுவா 4:14). தேவன் மாறாதவர் அவருடைய வார்த்தை மாறாதது. தேவன் சொன்னபடியே யோசுவாவை மேன்மைப்படுத்தினார்.

      மனிதன் மாறுகிறவன் அவனை நம்புவது வீண். தேவன் மாத்திரமே நம்மோடு கூட இருந்து நம்மை அவருடைய பாதையில் நடக்க வைத்து நம்மை மேன்மைப்படுத்துகிறவர்.  “இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரீக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார்” (1 நாளா 29:25). இங்கு தேவன் தான் சாலொமோனை உயர்த்துகிறதைப் பார்க்கிறோம். ஜனங்கள் முன்பாக நம்மை மேன்மைப்படுத்துகிறவர் கர்த்தர் மாத்திரமே. நம்மை நாம் மேன்மைப்படுத்திக் கொள்ளும்படியாக பிரயாசப்படுவோமானால் நாம் தாழ்ந்து போய்விடுவோம். ஆனால் கர்த்தர் நம்மை உயர்த்தும் பொழுது நிலையானதாக இருக்கும். “தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்” (2நாளா 1:1). கர்த்தரிடத்தில் உன்னை தாழ்த்து. அவர் உன்னை மேன்மைப்படுத்துவார்.  மேன்மைக்கு முன்னானது தாழ்மை என்பதை அறிந்துகொள்.