பிப்ரவரி 27

 “நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” (யோவான் 15:10).

பொதுவாக நாம் ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் எந்த அளவுக்கு முடியுமோ என்று எண்ணலாம். அல்லது அதற்குக் கீழ்ப்படிவதில் நாம் கடினமாக உணரக்கூடிய வாய்ப்பும் உண்டு. ஆனால் தேவனுடைய அன்பை நம்முடைய வாழ்க்கையில் அறிந்திருக்கும்பொழுது அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிவது ஒரு கடினமான காரியமாக இருக்க வாய்ப்பில்லை. அவருடைய அன்பை உணர்ந்து வாழுகிற வாழ்க்கையின் மூலமாக அவருடைய கற்பனைகளுக்கு மிகவும் சந்தோஷத்தோடும் மகிழ்ச்சியோடும் நாம் கீழ்ப்படிவோம். ஆண்டவர் சொல்லுகிறார், “என்னுடைய கற்பனைகளைக் கைகொண்டிருந்தால் என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்”. நாம் அவருடைய அன்பிலே நிலைத்திருக்கும்பொழுது அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வது நமக்கு இலகுவாக இருக்கும். ஆனால் அவருடைய அன்பை அறியாமல் போகும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் ஒருவேளை நாம் ஆண்டவருடைய கற்பனைகளை ஒரு நியாயப்பிரமாண அளவில் பார்க்கின்ற வாய்ப்புண்டு. தேவன் நம்முடைய வாழ்க்கையில் நாம் நிறைவேற்ற முடியாத விதத்தில் பலவிதமான கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார் என்று எண்ணக்கூடிய மனநிலையும் ஏற்பட வாய்ப்புண்டு. தேவனோடு கொண்டிருக்கின்ற உண்மையான உறவின் மூலமாக நம்முடைய வாழ்க்கையானது இன்னும் அதிகமாகப் பிரகாசிப்பதிலும் வளருவதிலும் காணப்படும். ஆகவே தேவனுடைய அன்பே நம்முடைய வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் மையமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் மற்ற எல்லாமே நமக்குக் கடினமாகக் காணப்படும். ஆனால் தேவனுடைய அன்பு நமக்கு மைய்யமாக இருக்குமென்றால், இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என்ற விளங்குதல் நமக்கு இருக்கும்பொழுது, அவருடைய கற்பனைகளைக்  கைகொள்வது நமக்குச் சிரமமாக இருக்காது. அவருடைய கிருபை நமக்குப் போதுமானதாய் இருக்கும். ஆகவே தேவனுடைய அன்பை நாம் விளங்கிக்கொள்ளப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்வாராக.