டிசம்பர்  31                                               

“நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்து போவதில்லை (சங் 102:27)

     இந்த ஆண்டின் கடைசி நாளில் நாம் வந்திருக்கிறோம். இந்த ஆண்டை ஆரம்பிக்கும்போது ஒரு முழு ஆண்டு நமக்கு முன்பாக இருந்தது. ஆனால் எவ்வளவு சீக்கிரத்தில் நாட்கள் ஓடிவிட்டது என்று பார்க்கிறோம். யோபு என்  நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது. (யோபு 7:6). என்று சொல்லுகிறவண்ணம் நாட்கள் பறந்துவிட்டன. மனிதனுடைய ஆண்டு முடிந்துவிடுகிறது. ஒரு ஆண்டு முடிந்து மறு ஆண்டு ஆரம்பமாகப் போகிறது.

    இந்த ஆண்டை திரும்பி பார்க்கிற வேளையில் நாம் முதலாவது அறிகிற உண்மையென்னவென்றால், தேவன் கடந்த ஆண்டு முழுவதும் உண்மையுள்ளவராயிருந்திருக்கிறார். இல்லையென்றால் இன்று ஜீவனோடு இருந்திருக்கமாட்டோம். நாம் இந்த ஆண்டின் கடைசி நாளில் நிற்பது அவருடைய உண்மையையும் கிருபையையும் நிரூபிக்கிறதாயிருக்கிறது. நம்மோடு இந்த ஆண்டை ஆரம்பித்த அநேகர் இந்த ஆண்டின் முடிவு நாளைப் பார்க்கவில்லை என்று பார்க்கும்போது, இம்மட்டும் ஜீவன் கொடுத்திருக்கிற கர்த்தரைத் துதிப்போமாக. ‘உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவராயிருந்ததினிமித்தமே நீங்கள் கடந்து வந்த அநேக சோதனைகளில் அழிந்து போகாமல் சோதனையைத் தாங்கும்படியான பெலத்தையும் கொடுத்தார். அதற்குத் தப்பித்துக்கொள்ளும்படியான போக்கையும்  உண்டாக்குவார். (1கொரி 10:13) இந்த ஆண்டு முழுவதும் தேவன் உங்களைத் ஸ்திரப்படுத்தினதினால், உங்களைத் தீமையினின்று விலக்கிக் காத்துக்கொண்டதினால், அவர் உண்மையுள்ளவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளமுடிகிறது.

    மனித ஆண்டுகள் முடியலாம். ஒருவேளை அநேகருடைய திட்டங்கள், செயல்பாடுகள் இந்த ஆண்டோடு முடிவடைகிறது என்று சொல்லலாம். ஆனால் எது எப்படியிருந்தாலும் தேவனுடைய ஆண்டுகள் முடிவதில்லை. அவருடைய வல்லமை, ஆளுகை மாறிபோவதில்லை, ‘இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும்  மாறாதவராயிருக்கிறார். (எபி 13:8). அந்த மேகஸ்தம்பத்தின் கீழாக நாம் என்றென்றும்  பாதுகாப்பாயிருப்போம்.