அக்டோபர் 9         

“கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்” .(செப்பனியா 1:18)

ஏற்கனவே இஸ்ரவேல் தேசம் அசீரியா ராஜாவினால் அழிக்கப்படும்படி தேவன் அனுமதித்திருந்தார். அவர்களுடைய பாவங்கள் அவர்களை அழிவுக்குள்ளாக வழிநடத்திற்று. அதைக்கண்ட செப்பனியா, தென்பகுதி, யூதா மக்கள் மனந்திரும்பும்படி அழைப்பு விடுக்கிறார். நம்முடைய பாவங்களை, தவறுகளை சுட்டிக்காட்டி எச்சரிக்கிற ஊழியர்கள் நமக்குத் தேவை. நம்மை முகஸ்துதி செய்து சமாதானம் என்று வெறுமையாக மேற்பூச்சு பூசுகிற ஊழியர்கள் நம்மை நன்மைக்கல்ல, தீமைக்கே வழிநடத்துகிறார்கள். அவர்களை நம்பி நாம் ஏமாந்துப்போகக்கூடாது.

கர்த்தருடைய உக்கிரத்தின் நாள்  என்று சொல்வது அவருடைய தண்டனையின் நாள், வருகையின் நாள், மற்றும் தேவனை அறியாதவர்களுக்கு இந்த உலகத்தின் மரண நாளும் உக்கிரத்தின் நாள்தான். தேவனுடைய தண்டனையைப் பெறும் நாள். தேவன் அன்புள்ளவர் என்று அநேகர் தங்களைத் தாங்களே இன்று ஏமாற்றிக்கொள்ளுகிறார்கள். மெய்தான் தேவன் அன்புள்ளவர், இரக்கமுள்ளவர்.  அது தேவனின் ஒரு பகுதியை மாத்திரம் வெளிப்படுத்துகிறது. தேவன் நீதியும், பரிசுத்தமுமுள்ள தேவன் என்பதையும் வேதம் போதிக்கிறது. ஆகவே நீதியின்மைக்கும் பரிசுத்தமின்மைக்கும் தண்டனையை செலுத்துவதும் அவர் தன்மையாக இருக்கிறது. அவர் “பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறார்” என்றும் “எரிச்சலுள்ள தேவன்”  என்றும் வேதம் சொல்லுகிறதை புறக்கணிக்கமுடியாது.

மனிதன் பொன்னும் வெள்ளியும் சேர்க்க எவ்வளவு பிரயாசப்படுகிறான். தேவனைத் தேடாமல் இவைகளைச் சேர்ப்பது பாவம். தேவனுக்கு முதலிடம் கொடுக்காமல் இவைகளைச் சேர்ப்பதிலும் சம்பாதிப்பதிலும் கருத்தை செலுத்தும் கவனம் பாவம். இன்றைக்கு நீ அவ்விதம் இருப்பாயானால், அது உனக்கு ஆசீர்வாதமாயிருக்காது என்பதை அறிந்துக்கொள். அது ஒருபோதும் உன் ஆத்துமாவைத் தப்புவிக்காது.