ஜூலை  31                     

‘நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது, என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்’ (சங் 86:13)

   மெய்யாலும் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவும் இவ்விதமாக சொல்லாமல் இருக்கமுடியாது. ஆண்டவரே என் ஆத்துமாவை தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். இந்த இடத்தில் தாழ்ந்த பாதாளம் என்று சொல்லப்படும் போது, தேவனையறியாத வாழ்க்கையைக் குறிக்கிறது. மேலும் அது படுபாதாளமான  நரகத்தைக் குறிக்கிறது. பாவமும், பாவவாழ்க்கையும் ஒருபாதாளம் போன்றது. அதிலிருந்து மேலே எழும்பி வருவது என்பது தேவனுடைய மகத்துவமான கிருபையே ஒழிய வேறொன்றுமில்லை.

   சங்கீதக்காரன், அவனுடைய வாழ்க்கையில் தேவன்  இவ்விதமாகத் தப்பிக்கும்படி தனக்கு பாராட்டின கிருபை பெரியது என்று நினவுகூறுகிறார். கிருபை என்று சொல்லப்படும்பொழுது தகுதியற்ற ஒருவனுக்கு கிறிஸ்துவின் மூலம் தேவன் காண்பிக்கும் தயவு, இரக்கம், அன்பு, தேவன் இவ்விதமாக நம்மைத் தப்புவிக்கத்தக்கதாக நம்மிடத்தில் எந்த மேன்மையும் இல்லை. நாம் பாதாளத்திற்கே பாத்திரவான்கள். ஆனால் தேவன் தம்முடைய கிருபையால் நம்மைத் தப்புவிக்கிறார். அந்த கிருபையின் மூலம் இவ்விதமான பாதாளத்திலிருந்து மீட்பை பெற்றிருக்கிறோம். தாவீது இதை மிகுந்த நன்றியுள்ள உணர்வோடு வெளிப்படுத்துகிறார். இந்த கிருபை அற்பமானதல்ல, பெரியது, மகத்துவமானது, மேன்மையானது என்று சொல்லுகிறார்.

   உன்னுடைய வாழ்க்கையில் இவ்விதம் தேவன் அன்புகூர்ந்து காண்பித்த கிருபையைக் குறித்து மேன்மை பாராட்டுகிறாயா?தேவன் இவ்விதம் உன்னிடத்தில் காண்பித்திருக்கும் கிருபையின் மேன்மையை நீ எவ்வளவு உணருகிறாயோ, அவ்வளவாக தேவனுக்கு நன்றியுள்ளவனாய் ஜீவிப்பாய். தாவீது  இன்னுமொரு இடத்தில் இவ்விதமாக சொல்லுகிறார். ‘கர்த்தாவே நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்’ (சங் 30:3). தேவன் உன்னை கிருபையாய் இரட்சித்திராந்திருப்பாரானால், நீ இன்றைக்குப் பாவம் என்கிற பாதாளத்தில் இருப்பாய் என்பதை நினைவுகொள்.