ஆகஸ்ட் 30       

“கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும்,  கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக”(1கொரி 15:58).

     கர்த்தருடைய ஊழியத்திலும் சரி, விசுவாச வாழ்க்கையிலும் சரி, பிரயாசங்கள் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாய் வாழமுடியாது. இந்தப் பிரயாசங்கள் குறுகிய காலத்திற்கோ அல்லது நீண்ட காலத்திற்கோ இருக்கலாம். அவைகள் கடுமையானதாகவும் இருக்க வாய்ப்புண்டு. கர்த்தருடைய ஊழியம் என்பது மிகவும் பிரயாசப்படவேண்டிய ஒன்று. பிரயாசமில்லாமல் பலனைபார்ப்பது, எதிர்ப்பார்ப்பது வீண். இது கர்த்தருக்காகவும் கர்த்தருக்குள்ளும் படும் பிரயாசம். அநேக சமயங்களில் எவ்வளவோ பிரயாசப்பட்டும் பலன் காணமுடியாத போது, அது விருதாவாகப் போய்விடுமோ என்று அச்சங்கொள்ளவேண்டியதாயிருக்கிறது. அது மட்டுமல்ல, அது அதிக சோர்வுக்கு உட்படுத்துவதுமாயிருக்கிறது. முக்கியமாக அதிக எதிர்ப்பார்ப்போடு உழைத்தும் பலன் காணமுடியாதபோது, அதைக் கைவிட்டுவிடவும் கூட நாம் ஏவப்படலாம். சாத்தான் நம்மை அதிகமான தளர்வுக்கு உட்படுத்தப்பார்க்கலாம்.

     ஆனால், தேவனுடைய வாக்குத்தத்ததை, நினைவுகூறுங்கள். அவைகள் விருதாவாய்ப் போகாது. நாம் எல்லாவற்றைப் பார்க்கிலும் தேவனுடைய வார்த்தையை நம்புவது நல்லது. எவ்வளவு எதிரான சூழ்நிலையாக இருந்தாலும் தேவனுடைய வார்த்தையைச் சார்ந்து கொள்வது நல்லது. ஆகவே, இவ்விதமான காலத்தில் பின்னடையாமல் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் இருக்கவேண்டும். தளராமல் நம்பிக்கையோடே இன்னும் ஊழியத்தில் உறுதியாய் நின்று செயல்படுவோமாக. அதோடு நில்லாது, அதில் அதிகம் பெருகவேண்டும் என்று தேவ வார்த்தை சொல்லுகிறது. அதில் இன்னும் நம்பிக்கையோடே பெருகுவோமாக. நமது நேரத்தையும் காலத்தையும், பிரயாசத்தையும் பெருக்குவோமாக. தேவன் ஏற்ற காலத்தில் திரளான ஆத்தும அறுவடையைக் கட்டளையிடுவார்.