கிருபை சத்திய தின தியானம்

ஏப்ரல் 22                    புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்         யோசுவா 1:1-18

“இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக;

இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி,

இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக;

அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய்,

அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்” (யோசுவா 1:8).

      மோசே இல்லாத சூழ்நிலையில், யோசுவா கர்த்தர் கிருபையினால், இஸ்ரவேல் மக்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் வழிநடத்தினதின்  ரகசியம் என்ன? அது கர்த்தருடைய வார்த்தையை பற்றிக்கொண்டு வாழ்ந்த காரியமாகவே இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய வார்த்தையை எல்லாவற்றிற்கும் சார்ந்துக்கொள்ள  ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நம்முடைய குடும்பத்திலும் கூட தேவனுடைய வார்த்தையை மையமாகக்கொண்டு செயல்படவேண்டியது மிக அவசியமானது.

      கர்த்தர், “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது” (உபா 6:6) என்று சொல்லுகிறார். கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய இருதயத்தில் கொண்டிருப்பது, நம் ஆத்துமாவிற்கு பாதுகாப்பானது.  இன்னும் நம்முடைய பிள்ளைகளை கர்த்தருடைய வார்த்தையின் மூலம் நடத்தும்பொழுது, நம்முடைய பிள்ளைகள் கர்த்தரின் கிருபையால் பாதுகாக்கப்படுவார்கள்.  உபா 6:7 –ல் “நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு” என்று சொல்லுகிறார். ஆகவே நம்முடைய பிள்ளைகளுக்கு தேவனுடைய வார்த்தையைக் கருத்தாய் போதிக்க வேண்டும்.

       சங்கீதக்காரனும் கூட, “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங் 1:2-3) என்று சொல்லுகிறார். கர்த்தருடைய நியாயப்பிரமாணம், அதாவது தேவனுடைய வார்த்தை நம்மைவிட்டு ஒருபொழுதும் பிரியக்கூடாது.