கிருபை சத்திய தினதியானம்

பிப்ரவரி 25              ஞானமுள்ள இருதயம்               1 இராஜா 3:1-15

“ஞானமும் உணர்வுமுள்ள

இருதயத்தை உனக்குத் தந்தேன்;” (1 இராஜா 3:12)

       நம்முடைய வாழ்க்கையில் தேவ ஞானம் தேவை. ஞானத்தில் குறைவுள்ளவன் தேவனிடத்தில் கேட்கக்கடவன் என்று யாக்கோபு சொல்லுகிறார் (யாக் 1:5). சாலமோன் ராஜா ஞானத்தைக் கேட்டது கர்த்தருக்கு பிரியமாய் இருந்தது. அநேக சமயங்களில் நாம் ஞானத்தை விட இந்த உலகத்தின் பல மாயையான காரியங்களையே பெற்றுக்கொள்ள விரும்புகிறோம். ஆனால் மெய்யாலும் நமக்கு ஆவிக்குரிய ஞானமே அதிமுக்கியமானது. அதை உணர்ந்து நாம் கர்த்தரிடத்தில் கேட்கும்பொழுது அவர் ஞானத்தையும், அதோடு கூட உன்னத சிலாக்கியங்களையும் கொடுக்கிறவராக இருக்கிறார்.
        மற்றொரு ஆசீர்வாதமான காரியம் என்னவென்றால், உணர்வுள்ள ஒரு வாழ்க்கை. இது ஆவிக்குரிய உணர்வு. நம்முடைய வாழ்க்கையில் நம் பாவத்தைக் குறித்த உணர்வு, தேவன் நமக்கு தேவை என்கிற உணர்வு, அவராலே மாத்திரமே இரட்சிப்பு என்கிற உணர்வு நமக்கு இருக்குமானால் அது மிகுந்த ஆசீர்வாதம் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும். சாலமோன் கர்த்தரிடத்தில் ஞானத்தைக் கேட்டபொழுது, ஞானத்தோடு ஐஸ்வரியத்தையும் கொடுத்தார் என்று பார்க்கிறோம். அதுமாத்திரமல்ல, “தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்” (1 இராஜா 4:29) என்று பார்க்கிறோம்.
   நம்முடைய வாழ்க்கையில் நாம் ஆவிக்குரிய நன்மைகளைத் தேடும்பொழுது, தேவையான மற்ற அனைத்தையுமே அவர் கூட்டிக்கொடாமல் விட்டதில்லை. முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தை தேடுங்கள், மற்ற அனைத்தையும் அவர் கூட்டிக் கொடுக்கிறவராகவே இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அன்பான சகோதரனே சகோதரியே, நாம் எதை வாஞ்சிக்கிறோம்? தேவனுடைய காரியங்களையா? அல்லது உலகத்தின் மேன்மைகளையா? நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து தேவனுடைய முதலாவது தேவனுடையவைகளைத் தேடக்கடவோம். இதுவே சிறந்த ஞானம்.