“கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்?” (சங்கீதம் 144:3).
மெய்யாலுமே இந்த தேவன் வானத்தையும் பூமியையும் சகலத்தையும் படைத்த சர்வ ஞானமுள்ள தேவன். மனிதன் ஒரு சிறிய எறும்புக்கும் சமம் இல்லை. மனிதன் மிக அற்பமானவன். ஆனால் தேவன் அவனைப் பார்க்கிறார். அவன் மேல் அக்கறையுள்ளவராகச் செயல்படுகிறார். இது மிகுந்த ஆச்சரியம்! ஏனென்றால் மனுஷன் மாயைக்கு ஒப்பாய் இருக்கிறான் என்று வேதம் சொல்லுகிறது. இது எவ்வளவு உண்மை! நித்தியத்தில் இந்த தேவனை நாம் முகமுகமாய்க் காணும்படியாக, அவருடைய அன்பில் பெருகி வாழும்படியாக இந்த உலகத்தில் நம்மை ஆயத்தப்படுத்துகிறார். நம்மைக் கவனிக்கிறார், நம்மை நேசிக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் தம்முடைய சொந்த குமாரனைக் கொடுத்து இவ்வளவாய் நம்மில் அன்புகூர்ந்தார். இந்த அன்பு விளங்கிக்கொள்ளக்கூடாத அன்பு. “என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மை தாமே ஒப்புக்கொடுத்த கிறிஸ்து இயேசு” என்று இயேசுவின் அன்பைக் குறித்துப் பவுல் சொல்லுகிறார். என்னைப் போல ஒரு பாவியையும் அவர் நேசிப்பார் என்றால் அது ஏன்? இது முற்றிலும் விளங்கிக்கொள்ள முடியாத ஒன்று. அவரை அறிந்துகொள்ளும் சிலாக்கியம் எனக்கு எப்படிக் கொடுக்கப்பட்டது? என்னில் எதாகிலும் நன்மை இருந்ததினாலா? இல்லை. தேவன் தாம் அன்பு கூர்ந்த மக்களிடத்தில் முடிவுபரியந்தம் அன்பு கூருகிறார். இந்த அன்பினால் மாத்திரமே நான் பிழைத்திருக்கிறேன். நான் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை. அவரே நம்மைத் தெரிந்துகொண்டார். இந்த அன்பு மாறாத நித்தியமான அன்பு. மனிதனை அவர் நினைப்பதற்கு அவன் எம்மாத்திரம்!