கிருபை சத்திய தின தியானம்

மார்ச் 9                       இராஜரீக கூட்டம்                தானி7:1–28

     ‘உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப் பெற்று,

என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் ராஜ்யத்தைச்

சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான்’ (தானியேல் 7:18).

     தேவனுடைய பரிசுத்தவான்கள்  உலகத்துக்குரியவர்கள் அல்ல, மகிமையான இராஜ்ஜியத்தைப் பெற்றுக்கொண்டு எப்பொழுதும் தேவனோடு இருக்கிற சிலாக்கியத்தைப் பெற்றிருப்பார்கள். ஆகவேதான் தேவன் தம் வார்த்தையின் மூலமாக இவ்விதம் சொல்லுகிறார், ‘நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்’ (வெளி 3:21). என்று சொல்லுகிறார்.இது எவ்வளவு ஒரு உன்னதமான வாக்குத்தத்தம் அல்லவா! 

     தேவனுடைய ஜனங்கள் எப்பொழுதும் ஜெயிக்கும்படியாக நியமிக்கப்பட்டவர்கள். பல போராட்டங்கள், கஷ்டங்கள், பாடுகள் ஊடாக அவர்கள் கடந்து சென்றாலும், சாத்தான் அவர்களை சோதித்தாலும் அவர்கள் தேவனுடைய பெலத்தாலே வெற்றியைச் சூடுகிறவர்களாக இருப்பார்கள். கிறிஸ்து எவ்விதம் உலகத்தை ஜெயித்தாரோ, அவருடைய மக்களும் அவ்விதமாகவே ஜெயிக்கப்பிறந்தவர்கள். ஆகவேதான் யோவான் நிருபத்தில், ‘தேவனாலே பிறந்தவர்கள் உலகத்தை ஜெயிப்பார்கள்’ என்று சொல்லுகிறார். 

   ‘வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரீகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான்’(தானியேல் 7:27) என்று வேதம் சொல்லுகிறது. சகலமும் கர்த்தருடைய ஆளுகைக்கு உட்பட்டதே. அன்பான சகோதரனே! சகோதரியே! பாவத்தினால் சிக்குண்டு துவளுகின்றயா? நம்பிக்கையின்மை உன்னை ஆட்கொண்டுள்ளதா? நீ தேவனுடைய பரிசுத்தவான் என்பதை நினைவில் கொள். மகிமையான ராஜ கிரீடம் உனக்கு காத்திருக்கிறது. விசுவாசத்தோடே கிறிஸ்துவின் பெலத்தினால் போராடு.