ஜனவரி 13

“கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை” (2இராஜாக்கள் 23:25).

ஆண்டவர் யோசியா ராஜாவைக் குறித்து என்ன அருமையான சாட்சியை வேத புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். நம்முடைய வாழ்க்கையும்கூட அவ்விதமாக ஒரு வாழ்க்கையாக இருக்குமானால் எவ்வளவு நலமாய் இருக்கும்! முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அவருடைய வார்த்தைக்குச் செவி சாய்க்கவும், அதற்கு இணங்கிக் கொடுக்கவும் நம் இருதயம் காணப்படும்படி வாஞ்சிப்போம். அப்பொழுது நாம் அவருக்கு பிரியமானவர்களாகக் காணப்பட முடியும். யோசியா ராஜவைக் குறித்து தேவன் இவ்வளவு அருமையான சாட்சியைக் கொடுப்பார் என்றால், அதைப் போல மேன்மையான காரியம் என்ன? அவனுடைய வாழ்க்கையில் இந்தளவுக்கு தேவனுடைய வார்த்தையின் பக்கமாய் தன்னை ஒப்புக்கொடுத்து வாழுவதற்குரிய காரணம் என்ன? யோசியா ராஜவைக் குறித்து இவ்விதமாய் சொல்லப்படுகிறது, “அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை” (2 இராஜாக்கள் 18:5). தேவனுடைய வார்த்தையின் பக்கமாய் திரும்புவதிலும், கர்த்தருடைய வார்த்தையைச் சார்ந்து, அவர் மேல் வைக்கிற  நம்பிக்கையிலும் அவனைப் போல ஒருவனுமில்லை. யோசியா ராஜவைப் போல ஆண்டவரே என்னுடைய வாழ்க்கையில் உம்முடைய வார்த்தைக்கு முழு மனதோடு செவிசாய்க்கவும் உம்மில் வைத்திருக்கின்ற நம்பிக்கையில் நாளுக்குநாள் வளரவும் பெருகவும் என்னை ஆசீர்வதித்தருளும் என்று நம்மை அவரிடத்தில் தாழ்த்தி ஜெபிப்போம். கிருபையுள்ள தேவன் நம்முடைய வாழ்க்கையில் அவரைச் சார்ந்துகொள்ளுகிற விசுவாசத்தையும் பெலத்தையும் தருவார்.