பிப்ரவரி 16

“என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்” (யாத் 20:6).

தேவன் அவருடைய கற்பனைகளை நமக்குக் கொடுத்திருப்பது பாரமானவைகளல்ல. அநேக சமயங்களில் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதை பாரமாக நாம் எண்ணுகிறோம். ஆனால் மெய்யாலும் அது உண்மையல்ல. ஆண்டவர், அவருடைய நுகம் இலகுவானது மிருதுவானது என்று சொல்லி இருக்கிறார். அவரிடத்தில் நாம் அன்புகூரும் பொழுது அவர் நம்மை நேசிக்கும் நேசம் எவ்வளவு பெரிது என்பதை நாம் விளங்கிக் கொள்வோம். அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்வது எவ்வளவு இலகுவானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நம்முடைய வாழ்க்கையைக் குறித்து நாம் சிந்திக்கும் பொழுது நம்முடைய சுய ஞானத்தினால் வாழ்வதென்பது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இம்மியேனும் பொருந்தாத காரியமாகும். அவருடைய கிருபையைச் சார்ந்துக் கொள்ளும்பொழுது நாம் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வது நமக்கு மிக சுலபமானது. அவருடைய கற்பனைகளை நாம் கைக் கொள்ளும்பொழுது ‘ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்’ என்று சொல்லுகிறார். இது எவ்வளவு உண்மையான வார்த்தை. மோசே இஸ்ரவேல் மக்களை விட்டுப் பிரியும் முன்பாக இதை உறுதிப்படுத்தும் முகமாகப் பேசுகிறார். “ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் பிரத்தியட்சமாய்ப் பதிலளிப்பார் என்றும் நீ அறியக்கடவாய்” (உபா 7:9-10) என்று சொன்னார்.

அவர் உடன்படிக்கையின் தேவன். அவர் தயவுள்ள தேவன். சொன்னதை உண்மையாய் நிறைவேற்றுகிற தேவன். தேவன் எவ்வளவு கிருபையாக தம்முடைய கற்பனைகளை நமக்கு கொடுத்திருக்கிறார். அவருடைய சத்தத்தை இன்றைக்கும் நாம் அவருடைய வார்த்தையின் மூலமாக கேட்கிறோம். ‘இதுவே வழி இதில் நடவுங்கள்’ என்று சொல்லுகிற அவரின் அருமையான சத்தம் நம்மைத் தவறிப் போகாதபடி, நம்மைக் காத்து வழி நடத்துகிறது.