“அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (எபேசியர் 4:30-32).
தேவனோடு நாம் கொண்டிருக்கும்படியான உறவு மிகவும் முக்கியமானது. நாம் ஆண்டவருடைய பிள்ளை என்று வெறுமையாகச் சொல்வது மட்டுமல்லாமல் அவரோடு கொண்டிருக்கும்படியான உறவில் நாம் வளருவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக பரிசுத்த ஆவியானவரோடு நாம் கொண்டிருக்கும் உறவு மிக முக்கியமானது. ஆகவே தான் பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள் என்று வேதம் சொல்லுகின்றது. நம்முடைய வாழ்க்கையில் அவரைத் துக்கப்படுத்துகிற காரியங்கள் இருக்கின்றதா என்று பார்த்து அவைகளை நீக்க வேண்டும் என்று வேதத்தில் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய அளவில் நம்மைக் காத்துக்கொள்வதில் ஜாக்கிரதையாக இருந்தால் மாத்திரமே, நாம் தேவனோடு கொண்டிருக்கிற உறவில் சரியானவர்களாகக் காணப்படுவோம். “நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்” (எபேசியர் 4:1-3) நம்முடைய வாழ்க்கையில் ஆவிக்குரிய விழிப்பும் ஜாக்கிரதையும் உள்ளவர்களாக நாம் வாழப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார். ஆண்டவருடைய சத்தியத்தை நாம் அன்புடன் கைக்கொள்வது மிக அவசியமாயிருக்கின்றது. நம்மில் வீணான சிந்தனைகள் காணப்படக் கூடாது. நம்முடைய சிந்தை விசுவாசத்தின் அடிப்படையில் காணப்படுகிறதா என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியம். மேலும் பரிசுத்த ஆவியானவரை நாம் துக்கப்படுத்தாமல் வாழுவது மிக அவசியம். அப்படிப்பட்ட உணர்வு நமக்குத் தேவை. ஆகவே பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துகின்ற காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்குமென்றால் அதை நம்மை விட்டுத் தீவிரமாய் விலக்கிப் போடுவது மிக அவசியம். ஆவிக்குரிய ஜாக்கிரதையுள்ளவர்களாக நம்மைக் காத்துக்கொள்வோமாக.