“என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை” 3 யோவான் 1:4

      இன்றைக்கு கிறிஸ்தவ வாழ்க்கையிலும் சரி, ஊழியர்களின் எதிர்பார்ப்பிலும் சரி தன்னுடைய மக்கள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்பதை அறிந்திருப்பது அவசியம். சத்தியத்தில் நடப்பதே தேவனுக்குப் பிரியமானதும், ஆவிக்குரிய வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய பாதுகாப்பாகவும் இருக்கிறது. இந்த நிருபத்தை யோவான் எழுதும் பொழுது, இரண்டாவது வசனத்தில் ‘பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இருக்கும் படி வேண்டுகிறேன்’ என்று எழுதுகிறார். இந்த வார்த்தையை இன்றைக்கு அநேகர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். ஆத்துமா சரியான விதத்தில் வாழ்வதில்லை, அதைக் குறித்து அக்கறை கொள்ளாமல், எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு என்று பேசுகிறார்கள். இது முற்றிலும் முரணானது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.  ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அவனுடைய ஆத்துமா சரியாக இருக்குமானால் மற்ற எல்லாவற்றிலும் அவன் நிச்சயமாக சரியாக வாழுவான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவன் சரியான நிலையில் வாழவில்லை என்றால், மற்ற எல்லாமே  தவறானதாகவே இருக்கும். நாம் சரீரத்தில் வாழ்வது சத்தியத்தின் வாழ்வை மையமாக வைத்தே இருக்கிறது என்பதை  மறந்துவிடக்கூடாது. நம்முடைய ஆத்துமா சரியாக வாழும் பொழுது, சரீரத்தின் செயல்பாடும், அதனுடைய நடத்தையும், அதனுடைய ஒவ்வொரு அடியும், செம்மையானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே மிகுந்த ஒரு சந்தோஷமான காரியம் என்னவென்றால் நாம் சத்தியத்தின் நடப்பதுதான். சத்தியத்தில் வாழ்வது நமக்கு மெய்யான மகிழ்ச்சியைத் தரும் என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.