கிருபை சத்திய தின தியானம்

டிசம்பர் 2                                                  தேவ மகிழ்ச்சி                                    ஆபகூக் 3 : 8 – 19

நான் கர்த்தருக்குள் மகிழ்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூறுவேன்.’ (ஆபகூக் 3 : 18)

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது ஒரு கிறிஸ்தவனுக்குக் கொடுக்கப்பட்ட சிலாக்கியம். அவன் அவ்விதம் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு அவனுக்கு அநேக காரணங்கள் உண்டு. இந்த இருண்ட உலகில் தேவன், அவனை தமது நித்திய அன்பிலே இந்த ஒளிக்குள் அழைத்திருக்கிறார். எத்தனையோ மக்களுக்குக் கிடைக்காத பாக்கியம் இது. தன்னை அழைத்த தேவன் தொடர்ந்து வழிநடத்துவதாக வாக்குக்கொடுத்திருக்கிறார். அவ்விதமாகவே ஒவ்வொரு நாளும் வழிநடத்தி வருகிறார். அவருடைய கிருபை அந்த நாளுக்குப் போதுமானதாக இருக்கிறது. எவ்வளவு பெரிய சோதனையாக இருந்தாலும், தேவன் கைவிடமாட்டார் எனற நிச்சயம் அவனுக்கு உண்டு. மேலும் முடிவுபரியந்தம் தன்னைக் காத்து வழிநடத்துவார் என்று நித்திய மகிமையுள்ள ராஜ்யத்தைத் தனக்கு அவர் கொடுப்பார் என்றும் அவன் அறிவான்.

மேலே சொன்ன வசனத்தை ஆபகூக் எந்த சூழ்நிலையில் சொல்லுகிறார்? எல்லாம் நன்றாய் இருக்கும்பொழுதா? இல்லை அதற்கு முந்திய வசனத்தைப் பாருங்கள். ‘என் குடல் குழம்பிற்று; அந்த சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று, , என் நிலையிலே நடுங்கினேன், ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டு நாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.

‘அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சைசெடிகளில் பழம் உண்டாகமற் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுபோனாலும், வயல்கள் தனியத்தை விளவிக்காமற் போனாலும், கிடையில் மாடு இல்லாமற் போனாலும்’ (ஆபகூக் 3 : 17) என்கிறார். இந்த சூழ்நிலையில்தான், அவரால் கெம்பீரமாக ‘ நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூறுவேன்’ என்று சொல்லமுடிந்தது. நாம் அவ்விதம் சொல்லமுடியுமா? ஆம்! மெய்கிறிஸ்தவனால் கூடும். ஏனென்றால் அவனுடைய மகிழ்ச்சியும், கெம்பீரமும் அவனைச்சார்ந்தோ, உலகத்தைச் சார்ந்தோ அல்ல, அது கர்த்தரைச் சார்ந்தது.