“விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” (எபிரெயர் 11:1).

கிறிஸ்துவுக்குள்ளான சந்தோஷத்திற்கும் விசுவாசத்திற்கும் இடையிலான ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. விசுவாசம் என்றால் என்ன என்பதை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். நான் ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்லுகிறேன். ஒரு விமானத்தில் பிரயாணம் பண்ணுகிற மனிதன் அந்த விமான ஓட்டியை முழுமையாக நம்புகிறான். அந்த விமானத்தைச் சரியான விதத்தில் அவர் இயக்கி சரியான இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறான். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது அவ்விதமாக ஆண்டவரை முழுமையாக நம்புவது. அவரிடத்தில் முழுமையாக நம்மை அர்ப்பணிப்பது ஒப்புக்கொடுப்பது. அநேக வேளைகளில் நாம் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் நம்முடைய வாழ்க்கையில் முழுமையான ஒப்புக்கொடுத்தல் என்பது இல்லை. நாம் ஆண்டவரிடத்தில் ஜெபிக்கிறோம், ஆனால் அடுத்த நிமிடத்தில் அதைக் குறித்து கவலைப்பட்டுக் கலங்குகிறோம். நாம் பேருந்தில் போகும்போதும் அந்த ஓட்டுனரை முழுமையாகச் சார்ந்து உட்காருகிறோம். ஆனால் கிறிஸ்துவை நாம் அவ்விதமாக சார்ந்து கொள்ளுகிறதில்லை. அநேக விசுவாசிகளுக்குள் இல்லாத ஒன்று  கிறிஸ்துவுக்குள்ளான நிறைவான சந்தோஷம். காரணம் அவர்கள் கிறிஸ்துவை முழுமையாக நம்புவதும், சார்ந்துகொள்வதும் இல்லை. இந்த நாளில் உங்களுக்கு மெய்யான சந்தோஷம் வேண்டுமென்றால் இயேசுவினிடத்தில் உங்களை முற்றிலும் அர்ப்பணியுங்கள். உங்கள் காரியங்கள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொடுங்கள். அவர் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் உங்களைக் கைவிட மாட்டார். உங்கள் பாவங்கள் ஆண்டவருக்கு முன்பாகத் தடையாய் இருக்குமென்றால் அதை அறிக்கையிட்டு ஒப்புரவாகுங்கள். தேவனோடு சரியான உறவு இல்லாத வாழ்க்கை மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையே அல்ல. இந்த நாளிலும் கர்த்தருடைய ஆவியானவர் உங்களை ஆராய்ந்து நிதானித்து உங்களைக் குறித்து வெளிப்படுத்துவாராக.