கிருபை சத்திய தின தியானம்
ஜூலை 3 சந்தோஷமும் சமாதானமும் ரோமர் 15 ; 1 – 13
’பரிசுத்த ஆவியின் பலத்தினாலெ உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.’
(ரோமர் 15 : 13)
ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய சொந்த பெலத்தினால் இந்த ஆவிக்குரிய ஜீவியம் ஜீவிக்கமுடியாது. அவன் அப்படி சொந்த பலத்தை நம்பி ஜீவிப்பானானால் தோல்வியில்தான் முடிவான். ஆகவேதான் தேவன் நமக்குத் தம்முடைய பலத்தை வாக்குப்பண்ணியிருக்கிறார். பவுலும் இங்கு பரிசுத்த ஆவியின் பலத்தினால் வரும் ஆவிக்குரிய நன்மைகளைக் குறித்துப் பேசுகிறார். மேலும் பவுல் 2 கொரிந் 6ம் அதிகாரத்தில் எவ்விதத்தினாலேயும் எங்களைத் தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.’ என்று எழுதுகிறார். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவனுக்கென்று வாழ, பரிசுத்தமாய் ஜீவிக்க, சாட்சியை விளங்கப்பண்ண, சோதனையின் வேளையில் வெற்றியுடன் கடந்துச்செல்ல ஒவ்வொரு அடியிலும் கர்த்தருடைய பலம் தேவை என்று உணருகிறீர்களா? நம்மில் வாசம்பண்ணி நம்மோடு இருக்கிற பரிசுத்த ஆவியானவர் நமக்கு இந்த பலத்தைக் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்துகொள், அப்போது நீ பலப்படுத்தப்படுவாய்.
அதினால் உன்னில் என்ன நடக்கும் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. நம்பிக்கை உண்டாவது மாத்திரமல்ல, அது பெருகும் என்று சொல்லப்படுகிறது. நாம் நாளுக்கு நாள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரும்போது அதிகமான சோதனைகளை சந்திக்கும்போதும், நம்பிக்கையால் உண்டாகும் தேவபெலத்தினால் பெருகுகிறவர்களாய் காணப்படுவோம். கிறிஸ்தவ வாழ்க்கை போராட்டம் நிறைந்தது, சத்துருவானவன் அதிகமாய் தாக்கப்படுகிற வாழ்க்கை என்றுதான் நினைக்கிறார்கள். இல்லை, இவை எல்லாவற்றின் மத்தியிலும் விசுவாசத்தினால் சந்தோஷமும், அதோடு கூட சமாதானமும் நிறைந்த வாழ்க்கை இது. அன்பானவர்களே! தேவன் உங்களை அவ்விதம் ஆசீர்வதிப்பாராக. சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.