“அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்” (யோசுவா 4:14). 

யோசுவா ஒரு வாலிபனாக தன்னுடைய வாழ்க்கையில் தேவனுக்குப் பயந்து வாழ்ந்தவன். மோசேக்கு பணிவிடைக்காரனாக இருந்தவன். தேவனுடைய பணியில் தன்னை முழு மனதோடு உட்படுத்திக்கொண்டு வாழ்ந்தவன். தேவனாக அவனை உயர்த்தும்வரை அவருடைய கரத்தில் அவன் அடங்கியிருந்தான். நம்முடைய வாழ்க்கையில் அநேகச் சமயங்களில் நம்மை நாமே உயர்த்திக்கொள்ள பார்க்கிறோம். தேவனுடைய காலத்திற்கும் நேரத்திற்கும் காத்திருப்பதில்லை. ஏற்றக்காலத்தில் அவர் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்தக் கைக்குள் அடங்கியிருங்கள் என்று வேதத்தில் பார்க்கிறோம். ஒரு மெய் கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில் தேவனுடைய கரத்தில் அடங்கியிருப்பதைப் போல பாதுகாப்பானது ஒன்றுமில்லை. நாம் நம்மை நாமே உயர்த்த விரும்பும்போது தோற்றுவிடுகிறோம். ஆனால் தேவன் நம்மை உயர்த்துவார் என்றால், அது நிலையானதாக இருக்கும். யோசுவாவின் வாழ்க்கையில் மோசேயால் செயல்படுத்த முடியாத காரியங்களை செயல்படுத்தும்படியாக தேவன் உபயோகப்படுத்தினார். ஆனால் எல்லா கனமும் மகிமையும் கர்த்தருக்கே உரியது. ஒருவேளை நான் இந்த ஆவிக்குரிய நிலையில் இருக்கிறேன் என்றால், அது என்னுடையது அல்ல அது கர்த்தருடைய கிருபை. அநேக வேளைகளில் நாம் நம்முடைய பழைய நிலையை மறந்துவிடுகிறோம். அதைக் குறித்து எண்ணிப்பார்க்காமல் நம்மை நாமே உயர்த்தப்பார்க்கிறோம். ஆனால் எப்பொழுதும் நம்முடைய பழைய நிலையை நாம் மறந்துவிடக் கூடாது. ஆண்டவர் ஏற்ற காலத்தில் நம்மை உயர்த்தும்படியாக அவருடைய பலத்த கைக்குள் நாம் அடங்கியிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது கர்த்தர் எந்தச் சூழ்நிலையில் எவ்விதமாக நம்மை உயர்த்துவது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் நம்மை உயர்த்துவார் என்றால் நம்மைக் கீழேத் தள்ள  ஒருவரும் இல்லை. யோசுவா கர்த்தருக்காகக் காத்திருந்த போது அது வீணாய்ப் போகவில்லை. தேவன் அழகாக அவனை உயர்த்தினார். அவனை மேன்மைப்படுத்தி ஆசீர்வதித்தார்.