கிருபை சத்திய தின தியானம்

ஜுலை 25                  யோனாவின் எரிச்சல்            யோனா  4: 1 — 11

‘ஆ கர்த்தவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான்

இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான்

முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்’ (யோனா 4:2)

      இந்த யோனா தீர்க்கதரிசினியிடத்தில் மனிதனின் விழுந்துபோன சுபாவத்தின் ஒரு பகுதியை  பார்க்கமுடிகிறது. யோனாவை நினிவே பட்டணத்தில் பிரசங்கிக்க தேவன் கட்டளையிட்டார். ஆனால் யோனா அதற்கு கீழ்ப்படியாமல் தர்ஷீசுக்குப் போகிற கப்பலில் ஏறினான். அவனை சமுத்திரத்திலே போட்டார்கள். யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார். அந்த மீன் வயிற்றில் தேவனை நோக்கி மிக உன்னதமான ஜெபத்தை ஏறெடுக்கிறான். கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார். அது யோனாவை கரையிலே கக்கிவிட்டது. யோனா நினிவே சென்று பிரசங்கித்தான். அப்போது தேவன் அந்த நினிவே மக்களை தண்டிக்காமல் அவர்களுக்கு இரங்கினார். இது யோனாவுக்கு கடும்கோபத்தை உண்டுபண்ணினது.

     வேதம் ஒரு மனிதனின் உண்மை நிலையை மறைப்பதில்லை. இங்கு யோனாவின் இருதயத்தில் மனுஷீக சிந்தையைப் பார்க்கிறோம். யோனா மீனின் வயிற்றில் மிக உன்னதமான ஜெபத்தைச் செய்தான் ஆனாலும் அவன் தான் எண்ணினபடி காரியம் நடைபெறவில்லை என்று அறிந்தவுடன் கடும்கோபம் கொண்டான். இன்றைக்கும் அநேக யோனாக்கள் இருக்கிறார்கள். அழகாக ஜெபிப்பார்கள், நீண்ட நேரம் ஜெபிப்பார்கள். ஆவிக்குரிய காரியங்களில் அதிக அக்கறையுள்ளவர்களாய் இருப்பதுபோலும் காணப்படுவார்கள். ஆனால் அவர்களின் வழிகளில் ஏதாகிலும் செயல்படாதிருக்குமானால் உடனே கோபம் வந்து விடும். தர்ஷீசுக்கு போனது சரியே என்று சாதித்த யோனாவைப் போல சாதிப்பார்கள்.

     இதே யோனா தான் உண்டாக்காத ஆமணக்குச் செடி, பூச்சியால் அரித்துப்போடப்பட்டு காய்ந்தவுடன் எரிச்சல்படுகிறான் நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்‘ (யோனா 4:9). அன்பான சகோதரனே! சகோதரியே! யோனாவின் குணம் உன்னில் இருக்கிறதில்லையா. நீ பக்தியுள்ளவன், பக்தியுள்ளவள் என்ற மேற்பூச்சில் ஏமாந்துபோகாதே,  கோபமும் எரிச்சலும் உன்னுடைய சமாதானத்தையும், மற்றவர்களின் சமாதானத்தையும் கெடுக்கும்.