“இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை” (யோபு 1:22).

யோபு தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த நெருக்கங்களை நாம் அறிந்திருக்கிறோம். அவன் எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் அவன் தன் பேச்சில் தடுமாறவில்லை. எத்தனை வேளைகளில் நம் வாழ்க்கையில் துன்பங்கள் துயரங்கள் வந்தால், நம்முடைய வார்த்தைகள் வித்தியாசமானவைகளாகக் காணப்படுகிறது. யோபு தேவனைப் பற்றி குறை சொல்லவுமில்லை என்று வேதத்தில் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருக்கும்பொழுது நம் ஆவிக்குரிய தன்மை வெளிப்பட முடியாது. ஆனால் நாம் சோதனைகள் நெருக்கங்கள் வழியாய்க் கடந்துபோகும்பொழுது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் உண்மையான நிலை வெளிப்படும். ஆகவே நம் சோதனை வேளைகளில் நாம் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம். நம் வாயின் வார்த்தைகளையும் தேவன் கவனிக்கிறார். யோபு தன் துன்பத்தின் மத்தியிலும் “கர்த்தர் கொடுத்தார் கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்” என்றான். யோபுவை தேவன் கைவிடவில்லை. யோபு தன் வாழ்க்கையில் இழந்துபோன எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக்கொண்டான். ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் எல்லாம் இழந்ததைப் போல எண்ணிப் பேசுகிறோம். ஆனால் தேவன் நாம் இழந்ததற்கு பதிலாக இரட்டிப்பான விதத்தில்  தருவார். ஒருவேளை இந்த உலகத்தில் இல்லையென்றாலும் நித்தியத்தில் அதின் பலனை தேவன் கொடுப்பார். ஆகவே நாம் மெய்யாலுமே இழக்கப்பட்டுபோவதில்லை. ஆகவே நாம் சோர்ந்துபோகாமல் எல்லாச் சூழ்நிலைகளிலும், நம் வாயின் வார்த்தைகள் முதலாய் நாம் ஜாக்கிரதையாயிருந்து கர்த்தரைக் கனப்படுத்துவோம் மகிமைப்படுத்துவோம்.