டிசம்பர் 25                                             

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக்கா 2:11)

    ரோம ராஜ்யம் அந்நாட்களில் உலகமெங்கும் கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்தது. யூதேயா தேசம் அவர்களுடைய ஆளுகையில் இருந்தது. யூதர்கள் தங்களை ரோமரின் ஆளுகையிலிருந்து விடுவிக்கும்படியான நாயகரை எதிர்ப் பார்த்துக்கொண்டிருந்த வேளை அது. மேசியா இந்த உலகத்தில் பிறந்து தங்களை ரோம கொடுங்கோல் ஆட்சியிலிருந்து நம்மை விடுவிப்பார் என்று எண்ணி அதிக எதிர்பார்ப்போடே ஒவ்வொரு நாளும் யூதர்கள் காத்திருந்தார்கள். அவர்கள் மேசியாவின் பிறப்பு மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்ற மனநிலையோடே எதிர்பார்த்திருந்தார்கள், ஆனால் தேவாதி தேவனோ தன்னுடைய பிறப்பிற்கென்று தாழ்மையான தாவீதின் ஊரான பெத்லகேமைத் தெரிந்துக்கொண்டார். மனிதனின் சிந்தைக்கும் தேவனின் செயல்பாட்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்!

    ஆண்டவராகிய இயேசு பிறப்பில் முக்கியமாக இரண்டு காரியங்கள் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறதைப் பார்க்கிறோம். 1. இரட்சிப்பு  2. மெய்சமாதானம். தேவதூதன் ‘கிறிஸ்து என்னும் இரட்சகர்’ என்று  குறிப்பிடுகிறான், அதாவது பாவத்திலிருந்து, பாவத்தின் அடிமைதனத்திலிருந்து, பாவத்தின் சாபத்திலிருந்து மீட்கும் மேசியா இன்று பிறந்திருக்கிறார். ஆதிமுதல் ஆண்டுவருகிற பாவ பிரச்சனைக்கு பரிகாரியாக இந்த இரட்சகர் பிறந்திருக்கிறார். மனிதனின் அடிப்படை பிரச்சனையே, அவன் பாவத்தின் பிரச்சனை தான். அது அவனுடைய வாழ்க்கையில் சமாதானமின்மைக்குள்ளும், முடிவில் ஆத்தும மரணத்திற்குள்ளும் கொண்டுச் செல்லுகிறது. இதினிமித்தம் அவன் வாழ்க்கையில் மெய் சமாதானமற்றவனாக வாழுகிறான். ஆனால் பாவத்தின் விடுதலை மெய்சமாதானத்தை கொடுத்து, சமாதான வழியில் நடக்கச் செய்கிறது. அன்பானவர்களே! இயேசு உனக்கு அவ்விதமான இரட்சகராயிருக்கிறாரா?  எல்லாவற்றைக் காட்டிலும் உன் முதல் தேவை இரட்சிப்பும், சமாதானமுமே, அதைத் தரக்கூடியவர் இயேசு என்னும் இரட்சகர் ஒருவரே. இந்த கிறிஸ்துமஸ் நாளில் இயேசு உனக்கு இரட்சகராக இருக்கிறாரா? அவரின் சமாதானம் உன்னிலுண்டா?