கிருபை சத்திய தின தியானம்

பிப்ரவரி 1                   இயேசுவின் மனதுருக்கம்                  மத் 14:1-14

“இயேசு வந்து, திரளான ஜனங்களைக்

கண்டு அவர்கள் மேல் மனதுருகி” (மத் 14 : 14)

   இயேசுவின் மனதுருக்கம் ஆச்சரியமானது! தேவன் நம்மை அழிக்கவே நாம் தகுதியானவர்கள், ஆனால் நம்மைப்பார்த்து இயேசு மனதுருகுகிறார். இயேசுவின் மனதுருக்கத்தை நினைத்துப் பார். அவருடைய மனதுருக்கம் வெறுமையானதாக அல்ல, மேலும் அந்த வசனத்தில் என்ன பார்க்கிறோம்?  ‘மனதுருகி அவர்களில் வியாதியஸ்தர்களாய் இருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.’

      நீ உண்மையிலேயே தேவையில் இருக்கும் போது இயேசுவின் மனதுருக்கத்தை எண்ணிப்பார். மற்ற மனிதர்கள் உன்னுடைய நிலையில் உன்மேல் மனதுருக்கம் காட்டாமல் இருக்கலாம். அவர்கள் ஒருவேளை அதற்குப் பதிலாக வெறுப்பையும், கசப்பையும் காட்டலாம். ஆனால் இயேசுவானவரின் மனதுருக்கம் மெய்யானது. அது செயல்படுவது, அது ஒருகாலும் மாறாதது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்போல அவருடைய மனதுருக்கம் மாறாதது. அவருடைய மனதுருக்கம் அவர்களை வியாதியிலிருந்து சுகப்படுத்தினதில் மாத்திரமல்ல, அவர்கள் பசியை எவ்விதமாய் போக்கிற்று என்று பார்க்றோறொம். உன்னுடைய சரீரப்பிரகாரமான அனைத்து தேவைகளிலும் இயேசுவின் மனதுருக்கம் உண்டு என்பதை நினை. உன்னுடைய தேவையான வேளைகளில், தேவனை நோக்கி ஜெபி. ஒரு மனிதனின் சரீர ஆத்தும தேவை அனைத்தையும் முழுமையாய் சந்திக்கிறவர் நமதாண்டவர்.

    ஆண்டவரே! என்னுடைய சரீர தேவைகளை சந்தியும். என்னுடைய ஆத்துமாவில் உன்வெளிச்சத்தைத் தாரும், என்னை ரட்சியும் என்று ஜெபி. தேவன் அவ்விதம் தம்முடைய கிருபையை வெளிப்படுத்துவார். (மத் 20:29-34) -ல் எவ்விதம் இயேசு எரிகோ பட்டணத்திலிருந்து எருசலேம் செல்லும் வழியில், இரண்டு குருடர்களின் ஜெபத்தைக் கேட்டார், பாருங்கள். ‘தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும்’ என்று அவர்கள் கூப்பிட்ட பொழுது இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டர்; உடனே அவர்கள் பார்வையடைந்து அவருக்குப் பின்சென்றார்கள் (மத் 20 : 34). இயேசுவின் மனதுருக்கம் உன்னையும் ஆற்றட்டும், தேற்றட்டும்.