ஜூலை 16               

“பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள் போல ச் சீராய் நடக்கக்கடவோம்” (ரோமர் 13:13).

      பொறாமை எவ்வளவாய் மனிதனை பல பிரச்சனகளுக்குள் நடத்துகிறது. நாம் கண்கூடாக பார்க்கிறோம். நீதிமன்றத்தில் சென்று பார்ப்பீகளானால், பொறாமையால் எவ்விதம் ஒருவர்மேல் ஒருவர் வழக்குகளைத் தொடர்கிறதையும் எத்தனை கொலைகளும் பயங்கரங்களும் நடக்கிறதைப் பார்க்கமுடியும். ஆனால் இது உலக மனிதர்களில் காணப்படும் காரியம். ஆனால் ஒரு கிறிஸ்தவன் பொறாமை உள்ளவனாக இருக்கமுடியுமா? இல்லை. அவன் அவ்விதமாக இருக்கக்கூடாது.

      வேதத்தில் பல இடங்களில் பொறாமை எவ்விதம் கொடுமையான காரியங்களை இழைக்கவும் துணிகிறது என்று பார்க்கிறோம். பொறாமைப் படுகிறவன், அதினால் பாதிக்கப்படாமல் இருப்பதில்லை. அதாவது நீ யார் மேல் பொறாமை கொள்ளுகிறாயோ அவர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்களோ இல்லையோ நீ அதனால் பாதிக்கப்படுகிறாய் உன் இருதயம் அதனால் பாதிக்கப்படுகிறது. உன் இருதயம் கடினப்படுகிறது. தேவனை நீ துக்கப்படுத்துகிறாய். அது மாத்திரமல்ல தொடர்ந்து பொறாமையானது இன்னும் அதிகமான பாவத்திற்கு உன்னை வழிநடத்திச் செல்லும். பாவம் என்று தனியாய் இருப்பதில்லை. அது எப்போதும் துணையைத்தேடும். ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் காயீன் ஆபேலைப் பாருங்கள். ஆபேலின் பலியை தேவன் அங்கிகரித்து, காயீனின் பலியை தேவன் புறக்கணித்தார். தேவன் அதை நீதியாக செய்தார். ஆனால் காயீன் ஆபேலின் மேல் பொறாமை கொண்டான். காயீன் அதோடு நின்றுவிடவில்லை, அவன் ஒரு கொலைகாரனாக செல்லும் அளவுக்கு அவனை அது கொண்டு சென்றது.

      பொறாமையோ எலும்புருக்கி” (நீதி 14:30) பொறாமை உள்ள மனிதனின் மனதிலும் ஆரோக்கியமிருக்காது, தேவன் நமக்கு கொடுத்ததில் சந்தோஷமுள்ளவர்களாய், தேவனையே நோக்கிப்பார்த்து சீராய் நடக்கக்கடவோம். உள்ளத்தில் நீ திருப்தியாய் இரு. அது உனக்கு ஆசீர்வாதமாய் இருக்கும்.