“கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” (நீதிமொழிகள் 10:22).

ஐஸ்வரியம் பாவம் அல்ல, ஆனால் அதை நாம் எவ்விதம் பெற்றுக்கொள்ளுகிறோம் எவ்விதம் கையாளுகிறோம் என்பது மிக முக்கியமானது. தேவன் தம்முடைய திட்டத்தின்படி ஐஸ்வரியத்தை தம்முடைய மக்களுக்குக் கொடுக்கிறார். இது கர்த்தருடைய ஆசீர்வாதமாக இருக்கிறது. ஆகவே ஐஸ்வாரியத்தை தேவன் நமக்குக் கொடுக்கும்பொழுது அது நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும். மேலும் வேதம் சொல்லுகிறது, அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் என்று. தேவன் கொடுக்கும் ஆசீர்வாததிற்கும் உலக வழிகளில் பெற்றுக்கொள்ளும்  ஆசீர்வாதத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. தேவன் தம்முடைய திட்டத்தின்படி நமக்குக் கொடுக்கும்படியான ஆசீர்வாதம் என்பது முழுமையான ஒன்று. அது நம்முடைய வாழ்க்கையில் கர்த்தருக்குள்ளாக சந்தோஷமாக அனுபவிக்கக்கூடியதாகக் காணப்படும். ஆனால் உலக வழிகளில் சம்பாதிக்கும் ஆசீர்வாதத்தில் தேவன் வேதனையையும் கூட்டிவிடுகிறார். நாம் எப்பொழுதும் நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவரே ஐஸ்வரியத்தை எனக்குத் தாரும் என்று கேட்பது ஞானமல்ல. ஆனால் தேவன் தம்முடைய திட்டத்தின்படி ஐஸ்வரியத்தைக் கொடுப்பார் என்றால் அது தவறல்ல. ஏனென்றால் நாம் நம்முடைய வாழ்க்கையில் பொருளாசையுள்ளவர்களாகவும் வாழந்துவிடக் கூடாது. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராய் இருக்கிறது என்று வேதத்தில் பார்க்கிறோம். ஆவிக்குரிய மக்கள் தங்கள் வாழ்க்கையில் எப்போதும் சமநிலை கொண்டு வாழுகிற வாழ்க்கையின் நிமித்தமாக அவர்கள் மகிழ்ச்சியாகவும், இருக்கிற ஐஸ்வரியத்திலும் அனுபவிக்கிறவர்களாய். அதே சமயத்தில் கர்த்தருக்கு நன்றி செலுத்தி அவரை மகிமைப்படுத்தக் கூடிய விதத்தில் காணப்படுவார்கள்.