“கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்” (கலாத்தியர் 5:6).

இந்த அன்பு தேவனுடைய அன்பைக் குறிக்கின்றதாக இருக்கிறது. நம்முடைய வாழ்க்கையில் தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதைக் குறித்து அறிந்துகொள்வோம் என்றால், அவரை விசுவாசிப்பது நமக்குக் கடினமாக இருக்காது. இந்த அன்பை ஆரம்பித்தது நானல்ல. தேவனே இதை ஆரம்பித்திருக்கிறார். “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது” (1யோவான் 4:9-10).  தேவனிடத்தில் நாம் எப்பொழுது அன்புகூர முடியும் என்றால், அவருடைய அன்பை நாம் சரியான விதத்தில் விளங்கிக்கொள்ளும்பொழுது மாத்திரமே. இந்த அன்பை நாம் விளங்கிக்கொள்ளாமல் தேவனிடத்தில் நாம் அன்புகூரமுடியாது. அநேக வேளைகளில் நாம் தேவனை நேசிக்கப் பிரயாசப்பட்டாலும் அது முடிவதில்லை. கிருபையின் சத்தியத்தின் மகத்துவம் என்னவென்றால், தேவனுடைய உன்னதமான அன்பை நாம் விளங்கிக்கொள்வதற்கு ஏதுவாக நம்மை வழிநடத்துகிறது. ஏன் அநேக சமயங்களில் நம்முடைய வாழ்க்கையில் அவிசுவாசம் ஏற்படுகிறது என்றால், அவருடைய அன்பை நாம் நம்பாததினால் தான். நாம் நம்முடைய பிரச்சனைகளை சூழ்நிலைகளைப் பார்க்கிறோம், ஆனால் இவைகளைக் கர்த்தர் என் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தோடு அனுமதித்திருக்கிறார், இது என் நன்மைக்கேதுவானது, இதில் தேவனுடைய உதவியில்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று நாம் அவரைச் சார்ந்துகொள்ளத் தவறுகிறோம். அவர் நம்முடைய வாழ்க்கையில் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் அன்பில் அடிப்படையிலேயே செய்கிறார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். தேவன் நம்மில் அன்புகூர்ந்திருப்பதினாலே நாம் பிழைத்திருக்கிறோம். “அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்” (1யோவான் 4:19). அவருடைய அன்பை விளங்கிக்கொள்கிறதினால் ஏற்படுகிற விசுவாசமே மெய்யான விசுவாசம். இந்த விசுவாசமே நமக்கு உதவும்.