நவம்பர் 22          

      “இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்” (சங்கீதம் 12:1)

      இன்றைய உலகமும், மனிதர்களும் மிகவும் கொடியதாக உள்ளது என்பதை அறிந்திருக்கிறோம். இந்த சங்கீதத்தில் தாவீதும் இரட்சியும் கர்த்தாவே என்று புலம்புவதைப் பார்க்கிறோம். நாம் வாழுகிற இந்த பொல்லாத சந்ததியின் மத்தியில், கர்த்தர் நம்மை இரட்சிக்கவும், பாதுகாக்கவும், வழிநடத்தவும் வேண்டுமென்று கதறி ஜெபிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அதே சமயத்தில் இந்த பொல்லாத சந்ததியில் கர்த்தர் ஆத்துமாக்களை எழுப்பி தரவேண்டுமென்று மன்றாடுவதும் நம் கடமையாகும்.

      “உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர். உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க்கலப்பானது” (ஏசாயா 1:21-22) என்று வேதம் சொல்லுகிறது. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! நம்முடைய தேவபக்தியானது தண்ணீர் கலந்த திராட்ச ரசத்தைப் போல காணப்படக் கூடாது. களிம்பு நிறைந்த வெள்ளியைப் போலவும் இருக்கக்கூடாது. நம் தேவபக்தியில் இவ்விதமாகக் காணப்படுவோமானால் அது வீண். நாம் இந்த சமுகத்தில் உப்பாகக் காணப்படுவது மிக அவசியம்.

      “நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்” (எரேமியா 5:1) என்று தேவன் சொல்லுகிறார். ஏசாயா, எரேமியா நாட்களில் தெய்வபக்தியுள்ள மக்கள் இருந்ததைப் பார்க்கிலும், இன்றைய தெய்வபக்தியுள்ள மக்கள் மிக மிக சொற்பமே. இந்த சூழ்நிலையில் தான் நீயும் நானும் தேவனுக்கென்று சாட்சியாக வாழ அழைக்கப்பட்டுளோம். தேவன் இன்றைக்கு நம்மை பார்த்து ஒரு நல்ல சாட்சியிடுகிற நிலையில், நம் தேவபக்தி இருக்கிறதா? ஆராய்ந்து பார். தேவ கோபாக்கினைக்கு பங்காளியாகாதே.