கிருபை சத்திய தின தியானம்

மார்ச்:     23                       எரிச்சல் தனியக்கடவது           எபேசியர். 4 : 22–32

 “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்;

சூரியன் அஸ்தமிக்கிரதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது” (எபே 4:26 )

        சிலர் இந்த வசனத்தைக் காண்பித்து கோபப்படுவதில் தவறு இல்லை என்று சொல்வதுண்டு,  வாசிப்பதுண்டு. ஆனால் இந்த வசனம் எந்த விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, அதற்கு முந்திய வசனம் என்ன சொல்லுகிறது? அதற்கு பிந்திய வசனம் என்ன சொல்லுகிறது என்பதை கவனிப்பதில்லை. கோபங்கொண்டாலும் என்று சொல்லப்படும்போது இயற்கையாக மனிதனில் ஏற்படும் சுபாவத்தின் ஆரம்பம். அதாவது ஒரு  காரியத்தை கேட்க்கும்போதோ அல்லது மற்றவர்கள் பேசும்போதோ அல்லது ஏதாவது ஒருவிதத்தில் கோப உணர்வு, நம்மில் எழும்ப வாய்ப்புண்டு. 

     இந்த உணர்வு எழ ஆரம்பித்தாலும், அது வெளியே ஓடிவரத் துரிதப்பட்டாலும், அல்லது அந்த உணர்வினிமித்தம் செய்கையிலோ, வார்த்தையிலோ வெளிப்படுவதற்கு தயாராக இருந்தாலும் என்பது அதின் அர்த்தம். இவ்விதமான அந்த ஆரம்பம் விசுவாசிக்கு விசுவாசி வித்தியாசப்படலாம். அவர்களுடைய பழைய வாழ்க்கையின் சுபாவங்களைப் பொருத்து அது வெளிப்படுவதற்கு இவ்வளவு துரிதமாயிருக்கும் என்று சொல்லலாம். ஆனால் அடுத்த பகுதியில் ‘பாவஞ்செய்யாதிருங்கள்’ என்று சொல்லப்படுவதை நாம் கவனிக்கவேண்டும். அந்த கோப உணர்வு பாவத்திற்கு ஏதுவான செய்கையாகவோ, சொல்லாகவோ வெளிப்பட்டுவிடலாம். அதை நீ அனுமதிக்ககூடாது. அப்படி அது அனுமதிக்கப்படுமானால் அது பாவம், பாவத்தின் செய்கை அல்லது பாவத்தின் செயல்.

      பாவம் எப்போது மேலே உயரச்செல்லும் படியைப்போன்றது. அதின் கடூரம், தன்மை அதிகரித்துக் கொண்டே போகும் ஆபத்து உண்டு. ஒரு மனிதன் கோபப்படும்போது அவனுடைய சரீரத்தில் அநேக நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. அவனுடைய சரீரத்தில் சில சுரப்பிகளும் வேலைசெய்கின்றன என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. அவ்விதமாக அது உயரே மேலே எழும்ப அனுமதிக்ககூடாது. அது எவ்வளவு சீக்கிரம் தணிக்கப்படுமோ அவ்வளவு சீக்கிரம் நல்லது. அவ்விதம் நாம் செயல்படாவிட்டால் பிசாசுக்கு நாம் இடம்கொடுக்கிறோம். அது ஆபத்தானது. (எபே., 4 : 27)