கிருபை சத்திய தின தியானம்

ஜூலை 7       அவனைக் கேட்டருளினார்          சங் 22 ; 20 -31

 ’உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பாயென்னாமலும் அருவருக்காமலும்,  தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்’ (சங் 22 : 24 )

            இன்றைக்கு ஒரு மனிதன் நன்றாக வாழும்போது அவனைச் சுற்றிலும் அநேக நண்பர்களும் உற்றாரும், உறவினர்களும் இருப்பார்கள். அவனில் அன்புகூறுவதுபோல அநேகர் காணப்படுவார்கள். அவனுக்கு உதவிசெய்ய அநேகர் முன்வருவார்கள். ஆனால் அவன் உபத்திரவப்படும்போது அவர்கள் எல்லோரும் எங்கே போனார்கள் என்று அறியமுடியாது. இதுவே மனிதனின் வாழ்க்கை. மனிதனின் தன்மை அவ்வளவுதான்.

            ஆனால் தேவன் அவ்விதமானவர் அல்ல. நீ உபத்திரவப்படும்போது அவர் மனிதர்களைப்போல உன்னைவிட்டு விலகிப்போகிறவர் அல்ல. நீ உபத்திரவப்படும்போது உன்னுடைய உபத்திரவத்தை உனக்கு அருமையானவர்களும் கூட சரியாக விளங்கிக்கொள்ளுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. ஆனால் தேவன் உன் உபத்திரவத்தை அற்பமாக எண்ணமாட்டார். உன் உணர்வுகள், மனவேதனைகளை தேவன் அலட்சியப்படுத்தமாட்டார். அவர் உன்னை நேசிக்கிறவரானபடியால் அவர் உன்னுடைய பாடுகளை, துக்கங்களை சுமந்தவரானபடியால் உன் வேதனைகளை நன்கு அறிவார்.

            யோபுவின் துன்பத்தில் அவனுடைய நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவர்களோ இன்னும் அதிகமான வேதனையை அவனுக்கு உண்டாக்கினார்கள். அவனுடைய மனைவி ஆறுதலாக இருக்கவேண்டியவளும் அவனுக்கு இடறலாயிருந்தாள். ஆனால் தேவன் யோபுவைக் குறித்து ‘என் தாசனாகிய யோபு’ என்று சொன்னார். அன்பானவர்களே! தேவனை அண்டிக்கொள்ளுங்கள். அவர் உன்னுடைய உபத்திரவத்தை அவர் அருவருக்கமாட்டார், அவருடைய முகத்தை உனக்கு மறைக்கமாட்டார். நீ உன்னுடைய உபத்திரவத்தின் வேளையில் அவரை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் உனக்குச் செவிகொடுத்து உன்னை விடுவிப்பார்.